விஜயகாந்த் ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகிறார்? தமிழர்கள் மனதை வென்ற தலைவன் குறித்த ஒரு பார்வை!
ஒருவரின் மறைவுக்குப் பிறகும் அவருக்கு ரசிகர்கள் வட்டம் பெரிதாகிக் கொண்டே போகிறதென்றால், நிச்சயமாக அது, கேப்டன் விஜயகாந்துக்குதான்...
2கே கிட்ஸ் என்று சொல்லப்படும் இளைய தலைமுறை பிள்ளைகள் கூட அவரைப் பற்றி, தேடித்தேடி படிக்கிறார்கள்... யூ டியூப் தளத்தில் விஜயகாந்த் குறித்த வீடியோக்களை தேடித்தேடி பார்க்கிறார்கள்...
விஜயகாந்தின் உதவும் குணம்..
விஜயகாந்துடன் பணியாற்றிய திரைக் கலைஞர்களோ, திரைப் பணியாளர்களோ, அவரைப் பற்றி நினைவுகூர்கையில், சிலிர்த்துக் போகிறார்கள்... அதற்குக் காரணம், விஜயகாந்தின் உதவும் குணம்தான்...
உதவி என்றால், சாதாரணமாக இல்லை... தனது திரையுலக வாழ்க்கையில் மொத்தம் 54 இயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறார் விஜயகாந்த்... குறிப்பாக திரைப்படக் கல்லூரி மாணவர்களை... ஊமை விழிகள் அரவிந்த் ராஜ், கேப்டன் பிரபாகரன் ஆர்.கே.செல்வமணி என்று தொடங்கும் இந்தப் பட்டியல், வல்லரசு மகாராஜன் வரை நீள்கிறது... வேறு எந்த ஸ்டாரும், இவரைப் போல, புதியவர்களுக்கு வாய்ப்பு தரவில்லை...
தயாரிப்பாளர்களின் நடிகன்..
தயாரிப்பாளர்களுக்கு செலவு வைத்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தவர் விஜயகாந்த்... ஒரு படத்தை ஒப்புக் கொண்டால், இயக்குநர் சொல்வதை மீறாமல், செய்து முடிப்பார்... ஏன், எதற்கு என்ற கேள்வியே எழுப்ப மாட்டார்... விஜயகாந்தின் இந்த அணுகுமுறையே, படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற பொறுப்பையும் முனைப்பையும் இயக்குநர்களுக்கு கொடுத்தது...
அதிரடியான சண்டைக் காட்சிகளும், அனல் பறக்கும் அரசியல் வசனங்களும் தான் விஜயகாந்த் படங்களின் ஸ்பெஷல்... ஆக்ஷன் சீன்களில் அனல் தெறிக்கும்... பொறி பறக்கும்... பரபரப்பான சண்டைக் காட்சிகள் ரியலாக இருப்பதற்காக, எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்க தயங்காதவர் விஜயகாந்த்...
அதனால் தான், அதிரடி ஆக்ஷன் படங்களை உருவாக்கும் கலைஞர்களின் முதல் தேர்வாக விஜயகாந்த் இருந்தார்...
மென்மையான கதாபாத்திரத்திலும் ரசிக்க வைத்தவர்..
எவ்வளவு ரிஸ்க்கான காட்சிகளா இருந்தாலும், அவரே தான் நடிப்பார்... டூப் போடச் சொன்னால், டூப் போடுறவரும் மனிதர் தானே, அவருக்கு ஒன்னும் ஆகாதா என்று எதிர்க் கேள்வி கேட்பார்...
மாநகரக் காவல், வல்லரசு, வாஞ்சிநாதன், அலெக்ஸாண்டர், உளவுத்துறை என, மிடுக்கான காவல் துறை அதிகாரியாக, கேப்டன் திரையில் தோன்றும்போதெல்லாம் வியந்து போயினர் ரசிகர்கள்...
அதே நேரத்தில், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, சின்னக் கவுண்டர், வானத்தைப் போல, தவசி போன்ற மென்மையான கதாபாத்திரங்களிலும், சிறப்பாக நடித்து உருக வைத்தார் கேப்டன்..
தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் காதலுடன் இருந்தவர்..
தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அத்தனை காதலுடன் இருந்தவர் விஜயகாந்த்... தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஒரு பிரச்னை என்றால், பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துவிடுவார்...
இப்ராஹிம் ராவுத்தர், ராதாரவி, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், பாண்டியன், சரத்குமார், அம்மா கிரியேஷன்ஸ் சிவா உள்பட, மிகப் பெரிய நண்பர்கள் வட்டாரத்தைக் கொண்டவர் விஜயகாந்த்... விஜி, விஜிமா என அன்பைப் பொழியும் இந்த 'நண்பேண்டா' வட்டத்தில், மிகவும் பொறுப்பான, அதே நேரத்தில் கலாட்டாவான நபராக இருப்பாராம், கேப்டன் விஜயகாந்த்...
தமிழ்த் திரை வானில் , கமல்ஹாசன் - ரஜினிகாந்த் என இரண்டு உச்ச நட்சத்திரங்கள் கோலோச்சிய காலத்தில், தனித்துவத்துடன் ஜொலித்து ஜெயித்தவர் விஜயகாந்த்... அதுக்கு காரணம் 2 விஷயங்கள் தான்... ஒன்று அவரது உழைப்பு, இன்னொன்று, மற்றவர்கள் அவர் மீது வைத்த மரியாதை...
மக்களின் மனதை வென்ற தலைவன்..
உடன் பிறந்த சகோதரனைப் போலவே இருக்கும் விஜயகாந்தின் தோற்றம், அவரை, மக்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமாகியது... அதனால் தான், விஜயகாந்தின் படத்தைப் பார்க்க, கிராமங்களில் இருந்து பக்கத்து நகரங்களுக்கு வண்டி கட்டிக் கொண்டு குடும்பம் குடும்பமாக வந்ததாக சொல்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்...
தமிழ்நாட்டு மக்கள், விஜயகாந்த்தை தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதியதற்கு, அவரது இறுதி ஊர்வலத்தில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டமே சாட்சி...