மழையால், சேதமடைந்த மாவட்டங்கள்
மழையால், சேதமடைந்த மாவட்டங்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தொடரும் கனமழை... சேதமடைந்த மாவட்டங்கள் என்னென்ன?

PT WEB

சென்னை புறநகர் பகுதிகள், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதியடைந்தனர். டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் காலி இடத்தில் தேங்கிய மழைநீரை மோட்டார் வைத்து இறைத்து, சாலையின் நடுவே மாநகராட்சி அதிகாரிகள் திறந்துவிட்டதால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் அவதியடைந்தனர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காணிமேடு, மண்டகப்பட்டு கிராமங்களுக்கு இடையேயான தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியது. இதனால் 10 கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக உச்சகட்டளை புதுதெருவை சேர்ந்த தேவிகா என்பவரது கூரை வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.

இதேபோல், பாகவதபுரம் வடக்குதெருவை சேர்ந்த ராஜம் என்பவரது வீட்டின் பின்பக்க சுவரும், தேப்பெருமாநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த குமரவேல் என்பவரது கூரை வீட்டின் சுவரும் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 16 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. பட்டமங்கலம் கிராமத்தில் பயிர் சேதங்களை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

மன்னார்குடி அருகே கீழ கண்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. நெல்மணிகள் மழையில் நனைந்து ஈரமானதுடன் மூட்டையிலேயே முளைக்கத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து நெல் கொள்முதல் நிலைய மேலாளரிடம் கேட்டபோது, “திறந்தவெளியில் உள்ள நெல்மணிகள் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது. இருந்தபோதும் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் உரிய முறையில் பதப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என தெரிவித்தார்.

மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வந்த அய்யன்குளத்தின் சுற்றுப்பாதை, கனமழை காரணமாக சரிந்து விழுந்து சேதமடைந்தது. இதனை சீரமைக்கும்பணியில் ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள் மழைக்கு கூட தாங்குபிடிக்காமல், நடைபாதை சேதமடைந்தது, பொதுமக்களிடையே கட்டுமான பணி குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது

மன்னம்பந்தல் ஊராட்சியில் கனமழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மழைநீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதையடுத்து மழைநீர் விரைந்து செல்வதற்கு குழாய் பதிக்கப்பட்டது.