அமைச்சர் விஸ்வநாதன் Pt web
தமிழ்நாடு

”மாணிக்கம் தாகூர் பேச்சைக் கேட்டிருந்தால்., காங்கிரஸின் தலைவிதி..” - அமைச்சர் விஸ்வநாதன்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே, மாணிக்கம் தாகூர், பிரவீண் சக்கரவர்த்தி கேட்டிருந்தால் காங்கிரஸ் கட்சியின் தலைவிதி மாறியிருக்கும் என காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக 6 மாதங்களாகவே திமுக-காங்கிரஸ் இடையேயான உறவில் இணக்கமான சூழல் இல்லை. காங்கிரஸில் பெரும்பாலானோர் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பினர். அதில் முக்கியமான விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர். தொடர்ந்து, திமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்த நிலையில், அவருடன் திமுகவிடனரிடையே கடுமையான மோதல் போக்கு நிலவியது.

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மேற்கொண்ட தீவிர முயற்சியினால் திமுகவும்-காங்கிரசும் கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. எனினும், அக்கூட்டணி தோல்வியைத் தழுவிய நிலையில், காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவளித்திருப்பதுடன் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறது.

தவெக - காங்கிரஸ்

இந்தசூழலில் தான், செல்வப்பெருந்தகை தனது மாநிலத் தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில், காங்கிரஸின் புதிய மாநிலத் தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதவியேற்றிருக்கிறார். இதற்கான பதவியேற்பு விழா நேற்று, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இவ்விழாவில், முன்னாள் தலைவர் செல்வப்பபெருந்தகை தனது பொறுப்புகளை மாணிக்கம் தாகூரிடம் வழங்கியிருக்கிறார்.

மேலும், இவ்விழாவில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசியது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. விழா மேடையில் அவர் பேசுகையில், ”தமிழகம் இதுவரை கண்டிராத முதலமைச்சராக ஜோசப் விஜய் இருக்கிறார். பல முதலமைச்சர்கள், தலைவர்களை பார்த்திருக்கிறோம்.

ஆனால், அவர்களை எல்லாம் விட மென்மையான முதலமைச்சராக விஜய் இருக்கிறார். தமிழகத்தில் வந்திருக்கக்கூடிய புதிய ஆட்சி லஞ்சம் வாங்காது. தமிழகத்தில் வந்திருக்கக்கூடிய புதிய ஆட்சி வன்முறையை தூண்டாது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சை கேட்டிருந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலையெழுத்தே மாறி இருக்கும். 70 சட்டமன்ற உறுப்பினர்கள் 10 அமைச்சர்கள் ஒரு துணை முதலமைச்சர் என மாறி இருக்கும். இனி காங்கிரஸ் கட்சிக்கு வசந்த காலம் தான்” எனத் தெரிவித்திருக்கிறார்.