செய்தியாளர்: மணிகண்டன்
விருதுநகர் அருகே குமரி – மதுரை தேசிய நெடுஞ்சாலை அக்ரஹாரப்பட்டி பாலம் அருகே லாரி பழுதாகி பாலத்தின் மீது நின்றிருந்தது. அப்போது அந்த லாரி மீது இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வாகனமும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த விருதுநகரைச் சேர்ந்த செல்வம், வினோத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு சென்ற மினி சரக்கு வாகனம் பழுதாகி நின்ற் லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த பழ வியாபாரி வேல்முருகன் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .இந்த விபத்து காரணமாக மதுரை - கன்னியாகுமரி சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.