செய்தியாளர்: நவநீதகணேஷ்
காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ராஜ சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அறையில் காரியாபட்டி, கரிசல்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலை நாக்பூர் லைசென்ஸ் பெற்று இயங்கி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது இந்த பட்டாசு ஆலையின் ஒரு அறையில் கல்குறிச்சியைச் சேர்ந்த சௌண்டம்மாள், தண்டியனேந்தலை சேர்ந்த முருகன், பேச்சியம்மாள், கருப்பையா மற்றும் கணேசன் அச்சங்குளத்தைச் சேர்ந்த மாரியம்மாள் ஆகிய 6 நபர்கள்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் கருப்பையா, சௌண்டம்மாள் ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த கணேசன், பேச்சியம்மாள், முருகன், மாரியம்மாள் ஆகிய நான்கு பேரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேன் வீரசேகரன், மேற்பார்வையாளர் கனி முருகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.