செய்தியாளர்: மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி - சாத்தூர் இடையே உள்ள சின்னகாமன்பட்டியில் கமல் குமார் என்பவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை (பெசோ) உரிமம் பெற்று கோகுலேஷ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் 50- க்கும் மேற்பட்ட அறைகளின் என்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலவை செய்யும் அறையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகே இருந்த 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் பணியாற்றிய 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அதில், மீனாம்பட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் மகாலிங்கம் (55) என்பவரது உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த ராமராஜ் மகன் ராமமூர்த்தி (45), செவல்பட்டியைச் சேர்ந்த கூடலிங்கம் மகன் லிங்குசாமி (45) உட்பட 4 பேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.