வெடிகுண்டு மிரட்டல் முகநூல்
தமிழ்நாடு

விருதுநகர்: முன்று மாதத்திற்குள் 4 முறை பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்..!

விருதுநகரில் நான்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், இதுவரை ஒரே ஒரு நபர் மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர் மணிகண்டன்

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ராஜாசிங் (51). பெரியபள்ளிவாசல் தெருவில் கடந்த 13 ஆண்டுகளாக மழலையர் பள்ளி நடத்தி வருகிறார். ராஜாசிங் மனைவி அமுதா இப்பள்ளியின் முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். இப்பள்ளியில் 185 குழந்தைகள் படித்து வருகின்றனர். 7 ஆசிரியர்களும் ஒரு உதவியாளரும் பணியாற்றி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டலில் கைதான முத்துக்குமார்

இந்நிலையில், இப்பள்ளியின் அலைபேசிக்கு கடந்த நவம்பர் 19-ம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பள்ளியில் வெடி குண்டு வைத்துள்ளதாகவும், உடனடியாக அனைவரையும் வெளியே அனுப்புமாறும், இல்லையென்றால் வெடிகுண்டு வெடித்துவிடும் என்றும் மிரட்டல் விடுத்தார். அதையடுத்து, பள்ளிக் குழந்தைகள் அனைவரும் எதிரே உள்ள மற்றொரு கட்டிடத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் ராஜாசிங் புகார் அளித்தார். அதைடுத்து, இந்த விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர். விசாரணயில், மழலையர் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாளி மெயின்ரோடு அப்பாவு நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (41) என்பது தெரியவந்தது. அதையடுத்து, விருதுநகர் பஜார் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

இதற்கிடையே டிசம்பர் 6-ம் தேதி தனியார் பெண்கள் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியின் இமெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அதே இமெயிலில் இருந்து கடந்த 3 நாள்களுக்கு முன்பு விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரிக்கும், பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை விருதுநகரில் 4 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற மூன்று வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளில் மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.