செய்தியாளர்: மணிகண்டன்
விருதுநகர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (50). இவரது மகன் விஜயகுமார், ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வந்த சாந்தி, திருவனந்தபுரத்தில் உள்ள உடல்நிலை சரியில்லாத தன் தாயை பார்க்க சமீபத்தில் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று சாந்தியின் மகள் கவிதா, சாந்தியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10.5 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.