விழுப்புரம் தனியார் பள்ளி குழந்தை, செப்டிக் டேங்கில் விழுந்து மரணம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

விழுப்புரம்: 3.5 வயது குழந்தையின் உயிரைப் பறித்த தனியார் பள்ளி செப்டிக் டேங்க்; வெளியான CCTV காட்சி!

விழுப்புரம் விக்கிரவாண்டியிலுள்ள தனியார் பள்ளியில் 3.5 வயது குழந்தை செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: காமராஜ் 

திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மைய ஒப்பந்த பணியாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். பழனிவேல் - சிவசங்கரி தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைதான், லியா லட்சுமி. தற்போது இவருக்கு 3.5 வயதாகிறது.

இவர், விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகேயுள்ள சென் மேரீஸ் மெட்ரிக்குலேசன் உயர் நிலைப்பள்ளியில் எல் கே ஜி படித்து வந்துள்ளார். வழக்கம்போல் இன்று குழந்தையை பெற்றோர், பள்ளியில் விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் குழந்தையானது மதியம் 1.50 மணி அளவில் இயற்கை உபாதையை கழிக்க பள்ளி வகுப்பறையில் இருந்து அருகிலுள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.

விழுப்புரம் தனியார் பள்ளி குழந்தை, செப்டிக் டேங்கில் விழுந்து மரணம்

பின் கழிவறையில் இருந்து அருகிலுள்ள செப்டிக் டேங்க் பகுதிக்கு அறியாமல் சென்ற குழந்தை லியா, செப்டிக் டேங்க் மீது போடப்பட்ட இரும்பு தகடு மூடி மீது ஏறியுள்ளார். ஆனால் அந்த மூடி துருப்பிடித்து இருந்ததால், குழந்தையின் பாரம் தாங்காமல் அப்படியே அது இடிந்துள்ளது. இதில் குழந்தை செப்டிக் டேங்க் உள்ளே விழுந்து மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்.

குழந்தையின் ஆசிரியர் ஏஞ்சல், நீண்ட நேரமாகியும் குழந்தை வராததால் கழிவறை பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். தொடர்ந்து எங்கு தேடியும் கிடைக்காததால் பயந்துள்ளார். பிற ஆசிரியர்களோடு சேர்ந்து தேடுகையில், செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததை பார்த்துள்ளனர். அங்கே தேடியபோது, உள்ளே குழந்தை இறந்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் குழந்தை உயிரிழந்ததை விக்கிரவாண்டி போலீசாருக்கும் தீயனைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் தனியார் பள்ளி குழந்தை, செப்டிக் டேங்கில் விழுந்து மரணம்

அதன் பேரில் தீயனைப்பு துறையினரும் போலீசாரும் குழந்தையை மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை இறந்தது தெரியவந்தவுடன், பள்ளிக்கு விடுமுறை அளித்த பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி சார்பில் பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு ‘உங்கள் குழந்தைகளை விரைவாக வந்து அழைத்து செல்லவும்’ என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். என்னவென்று புரியாமல் பெற்றோர்கள் அலறிடித்து கொண்டு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் பள்ளியில் ஒரு பிஞ்சுக் குழந்தை இறந்த சம்பவம் தெரியவந்ததை அறிந்து, பள்ளி வளாகம் முன்பு சில பெற்றோர் திரண்டணர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி நிர்வாகத்தினரின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் பிற குழந்தைகளின் பெற்றோர்கள் இணைந்து பள்ளி வாயில் முன்பாக விழுப்புரம் - சென்னை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

விழுப்புரம் தனியார் பள்ளி குழந்தை, செப்டிக் டேங்கில் விழுந்து மரணம்

அதன்பேரில் மறியலை உறவினர்கள் பெற்றோர்கள் கைவிட்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் விக்கிரவாண்டி எம் எல் ஏ அன்னியூர் சிவா நேரில் விசாரனை செய்தனர். நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியும் அளித்துள்ளனர்.

இதற்கிடையே குழந்தை தவறி செப்டிக் டேங்கில் விழுந்தபின் அதை ஆசிரியர்கள் மீட்டு காரில் சிகிச்சைக்காக ஏற்றிச் செல்வது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.