கடலூர் மாவட்டம் வெள்ளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முத்து, கடந்த 8ஆம் தேதி, புதுச்சேரி மாநிலம் குருவி நத்தத்தில் தனியார் மதுபானக்கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிலர், முத்துவை கற்களாலும் பாட்டிலாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த முத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயரிழந்தார். முத்து தாக்கப்படும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் முத்து உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுபானக்கடையை வெள்ளப்பாக்கம் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். கையில் குழந்தையுடன் முத்துவின் மனைவியும் போராட்டத்தில் பங்கேற்ற காட்சி காண்போரை கலங்க வைத்தது.
போராட்டத்தையடுத்து அங்கு புதுச்சேரி காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். முத்துவை கொலை செய்த குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு புதுச்சேரி அரசு வேலை வழங்க வேண்டும் முத்துவின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் மதுபான கடை உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். மேலும் அந்த மதுபானக்கடையை மூட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
முத்துவை கொலை செய்த ராஜேஷ், ரஞ்சித், ஆனந்தராஜ் ஆகிய மூன்று பேரை பாகூர் காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினரும், புதுச்சேரி வருவாய்த்துறையினரும் போராட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.