கனமழை காரணமாக நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கிராமம் ஒன்று தீவுபோல் காட்சியளிப்பதால் மக்கள் வெளியே வரமுடியாத நிலை உள்ளது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட சின்னூர்பேட்டை கிராமத்திற்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாமல் இருந்தது. கிராம மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு உப்பனாற்றில் பாலம் அமைத்து சாலை போடப்பட்டது. ஆனால் அந்த சாலை, கிராமத்தை இணைக்காமல் பாதியிலேயே நிற்கிறது. மழை காலத்துக்கு முன்னரே இணைப்புச்சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் தற்போதைய கனமழை காரணமாக சின்னூர்பேட்டை கிராமம் தீவு போல் காட்சியளிக்கிறது.
மக்கள் கிராமத்தை விட்டு வெளியே வர தண்ணீரை கடந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இணைப்புசாலை இல்லாததால் கிராமத்தில் இருந்து நகர் பகுதிக்கு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் குழந்தைகள் கல்வி வசதிக்கும் வந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். சின்னூர்பேட்டை கிராமம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பகுதியில் அமைந்துள்ளதால் தான் தமிழக அரசு அதிகாரிகள் தங்கள் கிராமத்தை கண்டுகொள்வதில்லை என குற்றஞ்சாட்டும் கிராம மக்கள், போர்கால அடிப்படையில் இணைப்புசாலை அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.