vikram vikram latest monkey issue
தமிழ்நாடு

விக்ரம் வீடியோவால் பற்றிய நெருப்பு! குரங்கு விவகாரத்தால் அதிரடி திருப்பம்! - வனத்துறை எச்சரிக்கை

நடிகர் விக்ரம் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அரிய வகை விலங்குடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

PT WEB

நடிகர் விக்ரம் வெளியிட்ட அரிய லார் கிப்பன் குரங்கு வீடியோவைத் தொடர்ந்து, சட்டவிரோத வனவிலங்கு வளர்ப்பு விவகாரம் பெரும் சர்ச்சை எழுப்பியது. ஈரோடு கேசவநாதனிடம் இருந்து விக்ரமின் உறவினர் குரங்கை வாங்கியதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், பறிமுதல், வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, வெளிநாட்டு அரிய விலங்குகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்போர் பரிவேஷ் 2.0 தளத்தில் கட்டாயப் பதிவு செய்ய வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விக்ரம் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அரிய வகை விலங்குடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த குரங்கு, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் “லார் கிப்பன்” என்ற அரிய வகை உயிரினம் எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, வனவிலங்கு வளர்ப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அழிவின் விளிம்பில் உள்ளதாகக் கருதப்படும் இத்தகைய பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை உரிய அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் வளர்ப்பது சட்டவிரோதம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டது.

vikram

அந்த விசாரணையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவரிடம் இருந்து, விக்ரமின் உறவினர் லார் கிப்பன் குரங்கை சென்னைக்கு வாங்கி வந்ததாகக் கூறப்பட்டது. மேலும், அந்த நபரிடம் இருந்து சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெளிநாடுகளைச் சேர்ந்த அரிய வகை வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பவர்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்பவர்களுக்கு வனத்துறை புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெளிநாட்டு அரிய வகை செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், அவற்றை அரசின் பரிவேஷ் 2.0 இணையதளத்தில் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்படாமல் உயிரினங்களை வைத்திருப்பவர்கள் 6 மாதங்களுக்குள் அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், புதிதாக விலங்குகளை வாங்குபவர்கள், வாங்கிய ஒரு மாதத்திற்குள் அவற்றைப் பதிவு செய்வது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அழிந்துவரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாடு பட்டியலில் இடம்பெற்றுள்ள அரிய உயிரினங்களை இறக்குமதி செய்யும்போது, பரிவேஷ் 2.0 இணையதளத்தில் பதிவு செய்வதுடன், தலைமை வனவிலங்கு காப்பாளரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழும் பெற வேண்டும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

vikram

இதுமட்டுமின்றி, செல்லப்பிராணிகளாக அரிய வகை வனவிலங்குகளை வளர்ப்பவர்கள், ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரிடம் அவற்றுக்கு உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விலங்குகள் தப்பிச் சென்றாலோ, உயிரிழந்தாலோ, குட்டி ஈன்றாலோ அல்லது வேறு ஒருவருக்கு விற்கப்பட்டாலோ, அது குறித்த தகவலையும் வனத்துறையிடம் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளைப் பின்பற்றாமல் அரிய வகை வனவிலங்குகளை வளர்ப்பவர்கள் மீது, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட உயிரினங்களும் பறிமுதல் செய்யப்படலாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. இதனால், விக்ரம் வீடியோவைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்கு மத்தியில், வெளிநாட்டு அரிய வகை வனவிலங்குகளை வளர்ப்பது தொடர்பான விதிமுறைகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

செய்தியாளர் - ராஜ்குமார் .ர