தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. அதேசமயம், ஆட்சியில் பங்கு தருவதாக அறிவித்தும், எந்தக் கட்சிகளும் தவெக கட்சியுடன் கூட்டணி வைக்காத நிலையில், தனித்து போட்டியிடுவதற்கு தவெக தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் தான், தவெக தலைவர் விஜய் சமீபத்திய கூட்டங்களில் பேசும்போது, ”எங்களுக்கு மக்களுடன் தான் கூட்டணி” என்பதை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இது, தவெக ஏறத்தாழ தனித்து களம் காணவே வாய்ப்பிருக்கிறது எனப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான், தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு, விஜயின் மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் கட்டுப்பாடுகள் அதிகரித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், எங்களின் பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறையினர் அனுமதி தர மறுக்கின்றனர் என தவெக நிர்வாகிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். கடைசியாக, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி சேலத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இதில், கலந்துகொள்ள 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதேசமயம், இந்தக் கூட்டத்திலும் பங்கேற்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழக மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தகைய சூழலில் தான், தவெக தலைவர் விஜய் வரும் 13-ம் தேதி வேலூரில் நடைபெறும் மக்கள் சந்திப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார். இதைத் தொடர்ந்து, அதற்கான முறையான அனுமதி பெற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனிடம் தவெக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் கடிதம் கொடுத்துள்ளது. அதற்கான முறையான அனுமதி பெற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனிடம் தவெக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் கடிதம் கொடுத்துள்ளது.
இது குறித்து மாவட்ட செயலாளர் வேல்முருகன் அளித்த பேட்டியில், ”23 ம் தவெக தலைவர் விஜய் வேலூர் வர உள்ளார். இதற்கான அனுமதி கடிதத்தை SP-யிடம் கொடுத்துள்ளோம். விரைவில் அவர்கள் உறுதிப்படுத்தி சொல்வதாக கூறியிருக்கிறார்கள். காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை 100% கடைபிடிப்போம் மக்கள் சந்திப்புக்கு வரும் மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் என ஒரு மினி மருத்துவமனையையே அமைத்துள்ளோம். 10 ஆம்புலன்சை நிறுத்த முடிவு செய்துள்ளோம், தன்னார்வலர்கள் குழு, மருத்துவம், கழிவறை, குடிநீர் வசதி என மக்கள் பத்திரமாக வந்து செல்ல தேவையான மக்கள் பாதுகாப்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.
விஜய் வரும் நேரம் குறித்து தலைமை கழகம் அறிவிக்கும். மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கு உட்பட்டு மக்கள் சந்திப்பு நடக்கிறது ஒரு தொகுதிக்கு 5 ஆயிரம் பேர் வரை எதிர்பார்க்கிறோம். 33 ஏக்கரில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறோம். ஒவ்வொரு கேலரிக்கும் ஒரு குடிநீர் தொட்டி மற்றும் ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்களை வைக்க உள்ளோம். மிக முக்கியமாக வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் வர வேண்டாம் என தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம். இந்த நிகழ்வை காவல்துறை ஒத்துழைப்போடு சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆறு இடத்தில் 20 ஏக்கரில் பார்க்கிங் வசதி செய்துள்ளோம். ஆம்பூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.