தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கிருக்கும் நிலையில், முதற்கட்டமாக திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில், செப்டம்பர் 13 ஆம் தேதி பரப்புரையில் ஈடுபட்டார். தொடர்ந்து தவெகவின் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில், கலந்து கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் சென்றார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்ற அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார்.
நாகை மாவட்டத்தில் நடந்த பரப்புரையில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, "எந்த மண்ணில் நின்று கொண்டிருக்கிறேன் என்று தெரியுமா... வேளாங்கண்ணி மண்... கப்பலில் இருந்து வந்திறங்கும் பொருட்களை விற்க, அந்தக் காலத்தில் நாகையில் அந்திக்கடைகள் இருக்கும் என கேள்விபட்டுள்ளேன்; மீன்பிடி தொழில், விவசாயம் என எல்லா பக்கமும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் இந்த நாகப்பட்டினம்.. மதவேறுபாடு இல்லாத, அனைவருக்கும் பிடித்துபோன, மதச்சார்புகளற்று வாழும் மக்கள் நாகை மக்கள்.
தமிழ்நாட்டின் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்திலிருப்பது நாகை துறைமுகம்தான்; ஆனால், இங்கு நவீன வசதிகளுடன் கூடிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை; அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள்கூட இங்கு இல்லை. அதிகப்படியான குடிசை வீடுகள் இங்கு இருக்கிறது. ‘இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் எங்கள் ஆட்சிதான் சாட்சி’ என அடுக்குமொழியில் பேசுவோரை கேட்டு கேட்டு, நம் காதில் இருந்து ரத்தம் வந்ததுதான் மிச்சம். இவர்கள் ஆண்டதில் தமிழ்நாட்டு மக்கள் தவியாக தவிக்கிறார்களே நம் மக்கள். அது பத்தாதா?
இலங்கை கடற்படையால் நம் மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணங்கள் பற்றியும் தீர்வுகள் பற்றியும் மதுரை மாநாட்டில் நான் பேசினேன். அதுவொரு தப்பா? மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நம் கடமை, உரிமைதானே? நான் என்ன இன்று நேற்றா மீனவர்களுக்கு குரல் கொடுக்கிறேன்? இதே நாகையில் 14 வருடங்களுக்கு முன்பு பிப். 22, 2011-ல் மீன்வர்கள் தாக்கப்பட்டது குறித்து பொதுகூட்டம் நடத்தினோம்தானே...
இந்த விஜய் களத்துக்கு வர்றது ஒன்னும் புதுசு இல்ல கண்ணா. முன்பு விஜய் மக்கள் இயக்கமா வருவோம். இப்போது தவெக என்ற அரசியல் இயக்கமா வர்றோம். அவ்வளவுதான் வித்தியாசம். அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காக நிற்போம். இது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள், இலங்கையில் இருந்தாலும் அல்லது உலகின் எந்த மூலையில் இருந்தாலும்... தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் குரல் கொடுப்பதும், அவர்களுக்காக நிற்பதும் நம் கடமை, உரிமை.
மீனவர்களின் உயிர் எந்தளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு ஈழத்தமிழர்களின் கனவுகளும், உரிமையும் முக்கியம். மீனவர்கள் தொடர்பாக கடிதம் எழுதிவிட்டு, அமைதியாக இருக்க நாம் கபடநாடக திமுக அரசும் இல்லை; மற்ற மீனவர்கள் என்றால் இந்திய மீனவர்கள், நம் மீனவர்கள் என்றால் தமிழக மீனவர்கள் என பிரித்து பேச நாம் பாசிச பாஜக அரசும் இல்லை. நிரந்தர தீர்வு கோருவதே எங்களின் முக்கிய நோக்கம்
நாகையில் உள்ள மண்வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும்; கடலோர கிராமங்களை காக்க, அலையாத்தி காடுகளை அழிப்பதை தடுக்க வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு சொந்த குடும்பத்தின் வளர்ச்சியையும், சுயநலனையும் பாதுகாக்கவே அரசு நினைக்கிறது. நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க காவிரியை கொண்டு வந்ததா இந்த அரசு? மீன் சம்பந்தமான தொழிற்சாலை, அரசு மரைன் கல்லூரி அமைப்பது, தொழில்வளத்தை பெருக்க ஏதேனும் ஏற்பாடு என எதையாவது செய்தார்களா?
ஆனால் ஒவ்வொரு முறை வெளிநாட்டுக்கு டூர் போய்விட்டு வரும்போதெல்லாம், பல கோடி முதலீடு என சொல்கிறார் முதல்வர்; மனசை தொட்டு சொல்லுங்க சி.எம். சார்... வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்ல முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முதலீடா? அல்லது உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டிற்கு செல்கிறதா? வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை போன்ற சுற்றுலாத் தளங்களை மேம்படுத்தினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்?
நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லையாம்.. நாகை புதிய பேருந்து நிலையம் சுத்தமாக இல்லை, ரயில் நிலையத்தில் வேலைகள் தாமதமாக நடக்கின்றன. நெல் மூட்டைகள் எல்லாம் மழையில் நனைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அதற்கு குடோன் கட்டி தந்திருக்கலாம். தேர்தலுக்கு முன்பு திமுகவினர் வந்து செய்வோம் செய்வோம் என்றார்கள். எதையாவது செய்தார்களா?
கடந்த வாரம் திருச்சி, அரியலூரை தொடர்ந்து பெரம்பலூருக்கு செல்ல வேண்டியது. ஆனால் ஒருகட்டத்தில் வண்டி நகர முடியாத அளவு கூட்டம். அதற்கிடையே சில கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர் மக்களிடம் இத்தருணத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் உங்களைத்தேடி நான் வருவேன். பரப்புரை கூட்டம் தொடர்பான திட்டத்தை நாம் போட்ட பிறகு, ‘ஏன் சனிக்கிழமை மட்டும்’ என சிலர் கேட்டனர். காரணம் என்னவென்றால், நான் வரும்போது உங்களுக்கோ, உங்கள் வேலைக்கோ எந்தவிதமான தொந்தரவும் வந்துவிடக்கூடாது
உங்கள் ஓய்வு நேரத்தில் வர வேண்டும் என நினைத்தேன். அதனால்தான் சனி, ஞாயிறில் மட்டும் திட்டமிட்டோம். மட்டுமன்றி, நாம் அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையா? நம் மக்களை சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அங்கு அனுமதி இல்லை இங்கு அனுமதி இல்லை என்கிறார்கள். ஆனால், அதற்கான காரணங்களைக் கேட்டால் சொத்தையாக இருக்கிறது. 5 10 நிமிடங்கள்தான் பேச வேண்டும் என்கின்றனர். நான் பேசுவதே மூன்று நிமிடங்கள்தான்.
அரியலூரில் நான் பேசும்போது மின்சாரம் தடைபட்டது. திருச்சிக்கு சென்று நான் பேச ஆரம்பித்த பிறகு ஸ்பீக்கருக்கு செல்லும் வயர் கட்செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தலைவரோ, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இங்கு வந்துபேசும்போது இம்மாதிரி நிபந்தனைகளைப் போடுவீர்களா? மின்சாரத்தை தடை செய்வீர்களா? அப்படி கட் செய்துதான் பாருங்களேன். பேஸ்மெண்ட் ஆடிவிடாதா? இதாவது பரவாக இல்லை. இதைத்தாண்டி ஒரு ரூல் போட்டார்கள். பஸ்ஸிற்குள்ளேயே இருக்க வேண்டுமாம். பேருந்தை விட்டு வெளியில் வரக்கூடாதாம். நேரடியாகவே கேட்கிறேன் சிஎம் சார். மிரட்டிப்பார்க்கிறீர்களா? அதற்கு இந்த விஜய் ஆள் கிடையாது. கொள்கையை பேருக்கு மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தை வைத்து கொள்கை அடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்.
நான் மக்களை பார்த்து பேசி அவர்களது குறைகளை கேட்கக்கூடாதா? நான் அரசியல் தலைவர் என்பதை மறந்துவிடுங்கள். தமிழ்நாட்டு மண்ணின் மகனாக, என் மக்களை சந்திக்கச் சென்றால் அப்போதும் தடைபோடுவீர்களா? இந்த அடக்குமுறை அராஜக அரசியல் எல்லாம் வேணாம். நான் ஒன்றும் தனியாள் அல்ல. மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி. மீண்டும் சொல்கிறேன். 2026ல் இருவருக்கு இடையில்தான் போட்டியே.. ஒன்று தவெக இன்னொன்று திமுக. இனி இம்மாதிரி தடைகளைப் போட்டீர்கள் என்றால் நான் நேரடியாக மக்களிடமே அனுமதி கேட்டுவிடுவேன்” எனத் தெரிவித்தார்.