தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுதான் சட்டப்பேரவைத் தேர்தல் என்றாலும் அரசியல் களத்தில் அனல் பறக்கும் நிகழ்வுகள் ஏற்கெனவே அரங்கேறத் தொடங்கிவிட்டன. களத்தில் புதிதாக இறங்கியுள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழகம், தனித்துப் போட்டியிடுமா? அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விகளுக்கு தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக அளித்த பதில்களை விவரிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு..
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் தனித்து நிற்கும் என்றும், தனித்து நிற்பதே சரியாக இருக்கும் என்றும் உறுதிபட கூறியுள்ளார் தேர்தல் வியூகரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர். 2026 தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்கும் என்றும் தனித்துச் செல்லும் என்றும் இருவேறு கருத்துகள் பேசப்பட்டுவரும் நிலையில், சமீபத்திய தவெக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரசாந்த் கிஷோர், புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளுக்குப் பெரிய இடம் இல்லாமல் இருக்க முக்கியமான காரணம், திராவிடக் கட்சிகள் அமைத்துள்ள களம். அண்ணா காலத்திலேயே கடைசி கிராமம் வரைக்கும் வலுவான அரசியல் கட்டமைப்பை நிறுவியது திமுக. அடுத்துவந்த கருணாநிதி அதை மேலும் வலுப்படுத்தினார். திமுகவில் 20 ஆண்டுகளுக்கு மேல் பயணித்தவரான எம்ஜிஆரும் அதிமுகவை உருவாக்கியபோது, திமுக போன்ற வலுவான கட்சி கட்டமைப்பை உருவாக்கினார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக என்று தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சிக்கும் இதுபோன்ற வலுவான அடித்தளம் இல்லாதது இன்றைக்கும் திமுக, அதிமுகவுக்கு உள்ள பெரும் பலம்.
சென்ற தேர்தலில் திமுகவுக்குத் தேர்தல் வேலை பார்த்த ஆதவ் அர்ஜுனாவுக்கு இது நன்றாகவே தெரியும். அதனால், தவெகவில் அவர் இணைந்ததுமே கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை விஜயிடம் பேசிவருகிறார். இதன் தொடர்ச்சியாகவே சமீபத்தில் கட்சிக் கட்டமைப்பை விரிவாக்கும் கூட்டத்தை நடத்தியது தவெக. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரசாந்த் கிஷோர், தவெக தனித்துப் போட்டியிடுவது ஏன் அவசியம் என்று விஜயிடம் விரிவாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாயின. பின்னர், இதையே வெளிப்படையாகவும் பேசினார் பிரசாந்த் கிஷோர்.
திமுக வலுவான கூட்டணி அமைத்துள்ள சூழலில், வரவிருக்கும் 2026 தேர்தலில் திமுகவை எதிர்கொள்ள அதிமுக வலுவான கூட்டணியை அமைப்பது அவசியம்; அந்த வகையில் தவெகவுடன் கூட்டணி பேச்சில் அதிமுக ஈடுபட்டிருக்கிறது என்று முன்னதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் இப்படி பேசியது குழப்பத்தை உண்டாக்கியது.
இத்தகு நிலையில்தான் பிஹாரில் பிரசாந்த் கிஷோரை சந்தித்தார் புதிய தலைமுறையின் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன். பிரசாந்த் கிஷோர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “விஜயை மாற்றத்தின் முகமாகப் பார்க்கிறார்கள் தமிழக மக்கள். மாறுபட்ட கட்சியாக தன்னை தவெக முன்னிறுத்தும் நிலையில், அந்த மாறுபாட்டை அது வெளிபடுத்துவது முக்கியம்; ஆகையால், தவெக தனித்துப் போட்டியிடும்; தனித்துப் போட்டியிட வேண்டும்” என்று உறுதிபட சொன்னார் பிரசாந்த் கிஷோர்.