விஜய் pt web
தமிழ்நாடு

“ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் தவெக எதிர்க்கும்” - விஜய் காட்டம்

“ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் தவெக எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்” என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அங்கேஷ்வர்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 தொடக்க நிகழ்ச்சியின்போது மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். அரசியல் காரணங்களுக்காகவே ஏற்க மறுக்கிறார்கள். தமிழக மக்களின் நலன்களை பார்ப்பதில்லை. நிபந்தனைகளை ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. இந்திய அரசமைப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் வரவேண்டும். அரசமைப்புச் சட்டத்துக்கு மேற்பட்டவர்களாக அவர்கள் நினைக்கிறார்கள். புதிய கல்விக்கொள்கைளை தமிழக அரசு ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

மும்மொழிக் கொள்கை கட்டாயம் எனக் கூறுவதா?: முதல்வர்

மத்திய கல்வி அமைச்சரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக புதிய தலைமுறையில் வெளியான செய்தியைக் குறிப்பிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!” எனத் தெரிவித்திருந்தார்.

மறுமுனையில் விகடன் குழுமத்தின் இணையதளம் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக விகடன் குழுமம் வெளியிட்டிருந்த அறிக்கையில், நூற்றாண்டு காலமாக கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், ஒருவேளை கேலிச்சித்திரம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால் அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் விகடன் குழுமம் தெரிவித்திருந்தது.

மும்மொழிக் கொள்கையை வலிந்து திணிப்பதா?: விஜய்

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மும்மொழிக் கொள்கை விவகாரத்திற்கும், விகடன் தளம் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதற்கும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், “மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?

ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.

ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்” எனத் தெரிவித்துள்ளார்.