தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. திமுக, அதிமுக, நாதக ஆகிய கட்சிகள் ஏற்கனவே களத்தில் உள்ள சூழலில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். ஏற்கனவே, தவெக பரப்புரைக்கு காவல்துறை அனுமதி கொடுக்க மறுக்கிறது என அக்கட்சியின் தொண்டர்கள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதற்குப் பிறகு, விஜய் தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபடுவார் எனக் கூறிவந்தார்.
எனினும், மார்ச் 30-ம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் , அன்றைய தினமே பரப்புரையைத் தொடங்கிய நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சென்னையில் தி.நகர் மற்றும் வில்லிவாக்கத்தில் அதிகப்படியான நிபந்தனைகள் காரணமாக காவல்துறை அனுமதியளித்தும் தவெக தரப்பில் இருந்து அன்றைய தின பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், திருச்சி கிழக்கு தொகுதியில் மனு தாக்கல் செய்த விஜய், அங்கு மட்டும் பரப்புரை செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 8-ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சாலைவலம் மற்றும் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
ஏப்ரல் 9-ம் தேதி கடலூரில் பரப்புரை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையும் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அன்றைய தினம் கடலூர் அருகில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்றதால், பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று காரைக்குடியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். ஆனால், பரப்புரைக்கு அனுமதி கொடுத்த இடத்தை சரியான நேரத்தில் அடைய முடியாத நிலையில், சாலை வலம் மட்டுமே மேற்கொண்ட அவர், உரை நிகழ்த்தாமலேயே திரும்பி சென்றிருக்கிறார். இதற்கிடையில், விஜயின் வாகனத்தை தொடர்ந்து சென்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாவது காரைக்குடி வரை தொடர்கதையாகி வருகிறது.
இந்த சூழலில் தான், கடலூரில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாகவே, ஒரு மாவட்டத்தில் பரப்புரையில், ஈடுபடும் விஜய் அருகில் இருக்கும் விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் சென்று பின் தரைவழியாக பரப்புரை நடைபெறும் இடத்திற்கு செல்வார். ஆனால், கடலூரைப் பொறுத்தவரை சென்னையில் இருந்து 175 கி.மீ சாலை வழியாக மட்டுமே செல்ல முடியும் என்ற சூழல் இருக்கிறது. இதனால், அதிகப்படியான விபத்து நிகழ வாய்ப்பு இருக்கிறது என தவெக தரப்பில் கருதப்படுகிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்று மீண்டும் கடலூர் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, நிர்வாக ரீதியான காரணங்களுக்காக கடலூர் பரப்புரை ரத்து செய்யப்படுவதாக தவெக தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரதான கட்சித் தலைவர்கள் நாள்தோறும் குறைந்தது 2 அல்லது மூன்று இடங்களில் பரப்புரை செய்துவரும் நிலையில், ஒவ்வொரு பிரசாரத்திற்கும் இடையே நாள் கணக்கில் விஜய் இடைவெளி விடுவதும் அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.