சேலம் மற்றும் வேலூரைக் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் பச்சைத் துண்டு அணிந்து கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாடு தான் தவெக; தவெக தான் தமிழ்நாடு. எனக்கும் தமிழக மக்களுக்கு இடையே யாராலும் நுழைய முடியாது. முதல்வர் ஸ்டாலின் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் போர் என்று கூறுகிறார். ஆனால், ரெய்டு என வந்துவிட்டால் வெள்ளைக் கொடை பிடிக்கிறார். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாடு அணியை டெல்லி அணியை வீழ்த்த முடியாது. கிரிக்கெட்டில் விசில் போடுவது சி.எஸ்.கே. தமிழ்நாட்டில் விசில் போடப்போவது தவெக. இந்த தேர்தல் மற்றவர்களுக்கு வேண்டுமானால், இது வெறும் தேர்தலாக இருக்கலாம். ஆனால், என்னை நேசிக்கும் மக்களுக்கு இது எமோசன். ஊழலற்ற, உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட நாம் ஆட்சி அமைப்பது அவசியம்.
தமிழ்நாட்டில் தண்ணீர் திவால் ஆகப்போகிறது என்பது குறித்து சமீபத்தில் ஒரு கட்டுரைப் படித்தேன். அப்போது, அது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவசாயத்தைப் பற்றி எனக்குத் தெரியாது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், விவசாயிகள் படும் கஷ்டம் குறித்து எனக்குத் தெரியும். அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் விவசாயிகளுக்கு மகனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன். நான் டெல்டாக்காரன் என்று கூறி உங்கள் காதுகளில் டால்டா ஊற்ற மாட்டேன். தமிழ்நாட்டில், மலைகள் வெட்டுவது, கனிமவளக் கொள்ளை, மணல் கொள்ளை, கனிமவளங்கள் கொள்ளை போன்றவற்றிற்கு திமுக தான் அனுமதி கொடுக்கிறது. இப்படி இருக்கும் போது தண்ணீர் திவால் ஆகாமல் இருக்காமல் என்ன செய்யும். திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது.
இதையெல்லாம் கேட்டால், காவிரி பிரச்சனையின் உன்னுடைய கருத்து என்ன? முல்லைப்பெரியாரில் உங்களுடைய கருத்து என்ன? என்ன எனக் கேட்கிறார்கள்.. கருத்து சொல்லி விட்டால் எல்லா முடிந்து விடுமா.? பேசிப்பேசித் தான் இந்த நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். எதை எப்படி பேசி முடிக்கவேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இதையெல்லாம், தமிழக வெற்றிக் கழகம் செய்யும் என்பதை அறிந்த கட்சிகள் நமக்கு பிழப்பு போய் விடுமோ என்பதை நமக்கு கரூர் விவகாரத்திலிருந்து ஜனநாயகன் திரைப்படம் வரை சதி செய்கிறார்கள். குறிப்பாக, நான் ஒருபக்கம் SOP போட்டு விஜயை தடுக்கிறான். நீ அவர் மீது குற்றச்சாட்டுகள் மேல் குற்றச்சாட்டுக்கள் வை. ஒன்னு நீ; இல்லை என்றால் நான். நமக்குள் யாரும் வரக்கூடாது. நம்மால் தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும். விஜய் வேற நமக்கு இடையில் வருகிறான் என டீலிங்க் போட்டு வேலை செய்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில், தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதியாக உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம்.
இந்த சூழலில், மீண்டும் முதல்வராக வருவோம் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், வரலாற்றிலேயே திமுக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது கிடையாது. அது, அவர்கள் அப்பாவாலேயே (கருணாநிதி) முடியவில்லை. நீட் தேர்வை தடுக்க மாநில அரசால் முடியாது என்பதை அறிந்து கொண்டே, நாங்கள் நீட் தேர்வை ஒழிப்போம் எனக் கூறி பரப்புரை செய்தார்கள். அதேபோல, திமுகவினர். ஆட்சிக்கு வந்தவுடன் பெரிய பெரிய திட்டங்களை செய்யமாட்டார்கள். ஆட்சி முடியும் போது தான் அடிக்கல் நாட்டுவார்கள். இவ்வாறு தான், தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்தவுடன் பெரிய பெரிய திட்டங்களை முதலிலேயே செய்யும் என்பதை இப்போது நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்ததாக, மீனவர்கள் பிரச்சனை என்று வரும்போது ஒரு கடிதம் எழுதிவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள். மத்திய அரசும் கண்டு கொள்வதில்லை. ஆனால், தவெக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, நம் மீனவர்கள் மீது யாரும் கை வைக்க முடியாத படி பார்த்துக்கொள்ளும். தவெக ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அதேபோல, வாக்குறுதிகளை கூறிவிட்டு நிறைவேற்றவில்லை எனக் கேட்டால் நிதி இல்லை எனக் கூறுகிறார். அப்போது, அவரின் அப்பாவின் சிலை வைக்க பணம் மட்டும் எங்கிருந்து வருகிறது. சமீபத்தில் இதுகுறித்து நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. இப்படி இருக்கும் திமுக முன்மாதிரியான ஆட்சி எனக் கூறுகிறார்கள். உண்மையில் இது மோசடியிலேயே முக்கியமான ஆட்சி. சிறுவர்கள் கூட ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி எனக் கூறுகின்றனர்” எனப் பேசினார்.
தொடர்ந்து, ”5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும். 2 ஏக்கர் அல்லது நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளிகளின் குழந்தைகளில் தொழிற்கல்வி இலவசாமக வழங்கப்படும். 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேசன் கடைகள் அமைக்கப்படும். ரேசன் கடைகளில் அரிசியைத் தவிர மற்ற பொருட்கள் பேக் செய்து கொடுக்கப்படும். உரத்தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படுத்தபடும்” உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்து தனது உரையை முடித்துக் கொண்டார்.