தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் உள்ளிட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன. 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில், அக்கட்சி தேர்தல் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், சேலம் மற்றும் வேலூம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து, இன்று தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
முன்னதாக, தஞ்சை அய்யாசாமிப்பட்டி அருகே உள்ள ஒரு 14 ஏக்கர் மைதானத்தில் தவெக மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக்கூட்டம் நடத்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இதையடுத்து, கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த காவல்துறை தவெக இந்தக் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்திருந்தது. இந்த சூழலில் தான், இன்று தவெகவின் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதியம் 12 மணி முதல் 4 மணிக்குள் இன்று நடைபெறவிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள 8 தொகுதிகளைச் சேர்ந்த 4,900 தவெக நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏற்கனவே கியூ ஆர் கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறு இல்லாமல் இருக்க சாலையை ஒட்டி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. சேலத்தில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பில், வெயில் தாக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், அடுத்ததாக நடந்த வேலூர் சந்திப்பில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தான் இன்றையக் கூட்டத்திற்கு பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், 25 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள். 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 குடிநீர் டேங்குகள், சிற்றுண்டிகள் மற்றும் 25 மருத்துவர்கள், 50 செவிலியர்கள், 100 க்கும் மேற்பட்ட செவிலிய உதவியாளர்கள் கொண்ட மருத்துவக் குழு போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தனிவிமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி சென்றிருக்கும் தவெக தலைவர் விஜய், அங்கிருந்து சாலை வழியாக தஞ்சாவூர் செல்லவிருக்கிறார்.
டெல்டா மண்டலத்தின் இதயப்பகுதியாக பார்க்கப்படும் தஞ்சாவூரில் விஜயின் உரை தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மேலும், இந்தக் கூட்டத்தில் விவசாயிகளை மையமாகக் கொண்டு அவரின் உரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.