வக்ஃப் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் விஜய், இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தவெக சார்பில் வழக்கு தொடர்ந்த நிலையில், தீர்ப்பை வரவேற்றிருக்கிறார் விஜய். வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமான நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. திமுக, விசிக, தவெக என்று பலதரப்பட்ட கட்சிகளும், வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்தை எதித்து உச்சநீதிமன்றத்தில் 70க்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த நிலையில், விசாரித்த உச்ச நீதிமன்றம், வக்ஃப் புதிய சட்டப்படி எந்த உறுப்பினர் நியமனமும் கூடாது.. ஏற்கெனவே வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துகளின் நிலம் வகைப்படுத்துதலும் கூடாது.. உறுப்பினர் நியமனம் அனைத்திலும் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று வக்ஃப் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அத்தோடு, மத்திய அரசு, மாநில அரசுகள், வக்ஃப் வாரியம் ஆகியவை அடுத்த 7 நாட்களில் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்டத்திருத்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விஜய், “வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய திரு. அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய விஜய் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, வக்ஃப் சட்டத்திருத்தத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய திருத்தங்கள் இருப்பதாகவும், அவை குறிப்பிட்ட மதத்தினரை ஒடுக்குவதாக இருப்பதாகவும் வாதங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது