வக்ஃப் விவகாரம் | பிரதமர் மோடி பேசிய கருத்துக்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சி எம்பிக்கள்!
வக்ஃப் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை உருவாக்கிய மத்திய அரசு, அதை சமீபத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இரு அவைகளிலும் நிறைவேற்றியது. தற்போது குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் சட்ட வடிவம் பெற்றுள்ளது. இதற்கிடையே இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மறுபுறம், உச்சநீதிமன்றத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனினும், வக்ஃப் பற்றிய பேச்சுகள் நாள்தோறும் விஸ்வரூபமெடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஹரியானா சுற்றுப் பயணத்தின்போது பேசிய பிரதமர் மோடி, “நூற்றுக்கணக்கான விதவை முஸ்லிம் பெண்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிறகுதான் வக்ஃப் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் சட்டத் திருத்தமும் செய்யப்பட்டது. இந்த நாட்டில் வக்ஃப் வாரியத்தின் பெயரில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த வக்ஃப் வாரிய நிலத்தால், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் மட்டுமே ஆதாயம் அடைகின்றனர். மத்திய அரசின் வக்ஃப் சட்டத்தால், நிலம் கொள்ளையடிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களைச் சுரண்டுவது தடுக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தால் இந்த நாட்டின் பழங்குடி மக்கள் நிலம் மீது யாரும் கை வைத்துவிட முடியாது. ஏழை முஸ்லிம்கள் தங்களது உரிமைகளை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் உண்மையான சமூக நீதி. அந்தப் பணம் ஆரம்பத்திலிருந்தே நேர்மையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், என் இளம் முஸ்லிம் இளைஞர்கள் சைக்கிள்களுக்கு பஞ்சர் போடுவதில் தங்கள் வாழ்க்கையை செலவிட வேண்டியிருக்காது. மனதில் முஸ்லிம்கள் மீது சிறிதளவு அனுதாபம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சி ஏன் ஒரு முஸ்லிமை கட்சித் தலைவராக ஆக்கவில்லை? அவர்கள் ஏன் அதைச் செய்வதில்லை” என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு AIMIM தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, ”ஆர்.எஸ்.எஸ்., பாஜக அதன் சித்தாந்தத்தையும் வளங்களையும் நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்தியிருந்தால், பிரதமர் தனது குழந்தைப் பருவத்தில் தேநீர் விற்க வேண்டிய அவசியமில்லை. பிரதமர் மோடி தனது அரசாங்கம் ஆட்சியில் இருந்த 11 ஆண்டுகளில் ஏழைகளுக்கு - இந்துக்கள் அல்லது முஸ்லிம்களுக்கு - என்ன செய்தார். வக்ஃப் சொத்துக்களில் நடந்ததற்கு மிகப்பெரிய காரணம் வக்ஃப் சட்டங்கள் எப்போதும் பலவீனமாகவே இருந்தன. மோடியின் வக்ஃப் திருத்தங்கள் அவற்றை மேலும் பலவீனப்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. இம்ரான் பிரதாப்கர்ஹி, ” ‘முஸ்லிம்கள் பஞ்சர் போடுகிறார்கள்’ என்பது சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்படும் வார்த்தை. பிரதமருக்கு இதுபோன்ற கருத்து பொருத்தமானதல்ல. மேலும், நீங்கள் நாட்டின் இளைஞர்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்கள். நாட்டில் வேலை இல்லை. பஞ்சரை சரிசெய்வது அல்லது பஜ்ஜி விற்பது மட்டுமே ஒரே வழி. முஸ்லிம்கள் பஞ்சரை மட்டும் செய்வதில்லை. முஸ்லிம்கள் செய்ததை என்னால் பட்டியலிட முடியும். ஆனால் இது சரியான நேரமல்ல. நீங்கள் காங்கிரஸ் அனுதாபிகள் (முஸ்லிம்களுடன்) என்று சொல்கிறீர்கள். நீங்கள் அவர்களை வெறுக்கிறீர்களா?
அப்படியெனில் முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் உசேன், எம்.ஜே.அக்பர் மற்றும் ஜாபர் இஸ்லாம் ஆகியோரை ஏன் குப்பைத் தொட்டியில் போட்டீர்கள்? வக்ஃப் மசோதா மூலம் முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், மக்களவையில் அதை முன்வைக்க உங்களிடம் ஒரு முஸ்லிம் எம்.பி.கூட இல்லை. முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். மக்களவை அல்லது ராஜ்யசபா அல்லது எந்த மாநில சட்டமன்றத்திலும் உங்களிடம் ஒரு முஸ்லிம் பெண் உறுப்பினர் இல்லை" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், ”அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் நாடாளுமன்ற விழாவில் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? காங்கிரஸ் ஏன் ஒரு முஸ்லிம் கட்சித் தலைவரை பெயரிடவில்லை என பிரதமர் கேள்வி எழுப்புகிறார். அப்படி எனில், பாஜகவுக்கு ஏன் ஒரு தலித் முதல்வர் இல்லை” என அவர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.