விஜய் Pt web
தமிழ்நாடு

”ஜெயலலிதா கருணாநிதி என் ரோல் மாடல்; கரூர் சம்பவம் எதிர்பாராத ஒன்று” - தவெக தலைவர் விஜய் பேட்டி!

அரசியலில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரே தனது ரோல் மாடல் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

PT WEB

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் விஜயால் உருவாக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இது தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பொதுவெளியில் தவெகவின் செயல்பாடு குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்து 2 வருடங்களுக்கு மேலாக ஆனா நிலையிலும் இன்னும் செய்தியாளர்களை சந்திக்காமலேயே இருந்து வருகிறார் என குற்றச்சாட்டும் ஒருபக்கம் எழுந்து வந்தது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு முதன் முறையாக பேட்டியளித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்

ஆங்கில தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரது கருத்துகளை பகிர்ந்துள்ளார். ஜனநாயகன் திரைப்படம் வெளியிடுவதில் தடைகள் வரும் என்பது எதிர்ப்பார்த்த ஒன்றுதான் என கூறியுள்ள அவர், திரைப்பட தயாரிப்பாளர் பாதிக்கப்பட்டுள்ளதற்கு வருத்தமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கரூர் சம்பவம் தான் எதிர்பாராத ஒன்று என்றும், அந்த சம்பவம் தன்னை இன்றுவரை பாதித்து வருவதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வரவேண்டும் என நீண்டகாலமாகவே திட்டமிட்டு வந்ததாகவும், 33 ஆண்டுகால திரை வாழ்க்கையை விட்டு அரசியலுக்கு வருவது என்பது எளிதான ஒன்றல்ல என்றும் விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில், தான் கிங்மேக்கராக அல்லாமல் கிங்காகவே இருப்பேன் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு, அரசியலில், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரே தனது ரோல் மாடல் என விஜய் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. விஜய் இடதுசாரியா அல்லது வலதுசாரியா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இடது, வலது என்பதைத் தாண்டி மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமே தனது அரசியல் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.