மாமல்லபுரத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், கூட்டணி குறித்து பொய் பிரசாரம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார். மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் இல்லை என்றும், தவெக தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், மக்கள் டீம் என்ற உண்மையை அறிந்த பிறகு, அவதூறு பரப்புவோர் எதையும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் ரமலான் திருநாளை முன்னிட்டு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தவெக கட்சியை சேர்ந்த இசுலாமியர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு 1000 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் புர்கா உடை அணிந்து வந்திருந்தனர்.
விஜய்க்கு இஸ்லாமியர்கள் ஹஜ்யாத்திரை சென்று வழிபடும் புனித தலமான மெக்கா நகரின் வழிபாட்டு மையத்தை தத்ரூபமாக வெள்ளியில் வடிவமைத்து, அதனுள் குரான் வைத்து நினைவு பரிசு வழங்க ஒருவர் கொண்டு வந்திருந்தார்.
இந்நிலையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், இஸ்லாமிய சகோதரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
இஃப்தார் நோன்பு நிகழ்வில் பங்கேற்றபிறகு செய்தியாளர்களிடம் பேசிய தவெக தலைவர் விஜய், கூட்டணி குறித்து பொய் பிரசாரத்தை செய்து வருகின்றனர். நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்தே நம்மை பற்றி வதந்திகள் சொல்லிக் கொண்டுள்ளனர். எப்போதும் மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் இல்லை, நம் தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். தவெக தலைமையில் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்தார்.
மேலும்,”தவெக அந்த டீம், இந்த டீம் என்று சில வதந்திகளை சொல்லிக் கொண்டே இருந்தனர். விஜய் எந்த டீமும் இல்லை, மக்கள் டீம் என்று தெரிந்த பிறகு அந்த கூட்டணி, இந்த கூட்டணி என்று பேசுகின்றனர். யார் எந்த அவதூறு பரப்பினாலும் எல்லாம்வல்ல இறைவன் அருளால் நாம் நினைத்த இலக்கை அடைய முடியும்” என்றும் பேசினார்.