தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டது. தனிப்பெரும் கட்சியாக விஜயின் தமிழக வெற்றிகழகம் 108 இடங்களில் வென்ற நிலையில் அந்த கட்சி ஆட்சியமைப்பதற்கான வேலைகளை தொடங்கியது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் கட்சியாக தவெகவுக்கு ஆதரவு அளித்தது.
தொடர்ந்து தவெக சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்ட நிலையில், பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் CPI,CPM, விசிக, IUML ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அதற்கான கடிதத்தை வழங்கின.
அதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மற்றும் அவரின் அமைச்சரவைக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிராமணம் செய்துவைத்தார். அதே நேரம் மே 13-ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் முதல்வர் விஜயிடம் கூறியதாக செய்திகள் வெளியானது.
இந்த சூழலில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்த நிலையில், இறுதியாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை பதிவு செய்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.
அதன்படி திமுக மற்றும் திமுக சின்னத்தில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே சபையில் இருந்து வெளியேறினர். திமுக சின்னத்தில் வெற்றிபெற்றிருந்த மதிமுக எம்.எல்.ஏக்கள் இருவர் சட்டமன்றத்துக்கே வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல தேமுதிக உறுப்பினர் பிரேமலதாவும் வெளிநடப்பு செய்தார்.
தொடர்ந்து நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக தவெக உறுப்பினர்கள், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, IUML ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதே போல அதிமுகவின் 25 உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமமுகவின் ஒரே ஒரு உறுப்பினரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இது தவிர பாமக, பாஜக ஆகிய கட்சிகள் நடுநிலை வகித்த நிலையில், அதிமுகவின் 22 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 144 வாக்குகள் கிடைத்ததாகவும், எதிராக 22 வாக்குகள், நடுநிலையாக 5 வாக்குகள் பதிவானதாகவும் கூறிய சபாநாயகர் தீர்மானம் வெற்றிபெற்றது என்று அறிவித்தார்.
இரண்டு மதிமுக எம்.எல்.ஏக்கள் தவிர்த்து விஜய் திருச்சி கிழக்கு MLA பதவியை ராஜினாமா செய்திருந்தார். மேலும் நீதிமன்ற வழக்கு காரணமாக திருப்பத்தூர் எம்.எல்.ஏ சட்டப்பேரவைக்கு வருகை தரவில்லை.