செய்தியாளர்; M.மீரா
தமிழ்நாட்டின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன், இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும். இதில் கல்வி, மருத்துவம் மற்றும் முதியோர் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
”கடனை அடைக்காமல் புது திட்டத்துக்கு எப்படி நிதி ஒதுக்கீடு செய்யமுடியும்? பயிர்க்கடன் ரத்து அறிவிப்பு என்ன ஆனது? தவெக அரசின் பெரும்பாலான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. நிதிக் கசிவு இருக்கிறது என்கிறார்கள். ஆனால், அது குறித்து விவரங்கள் அளிக்கவில்லை”.
தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்:
”புதிய தொழிற்சாலைகள் குறித்த அறிவிப்புகள் இல்லை. வேலை வாய்ப்பின்மையை தீர்ப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை. தமிழக அரசின் வட்டியும் கடனும் ஏறிக்கொண்டே போகிறது”
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
”பட்ஜெட் மிகப்பெரிய பூஜ்யம். திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். தவெக சொன்ன மாற்றம், பெயர் மாற்றம்தான் . தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இல்லை. தமிழ்நாட்டை முதலிடத்துக்குக் கொண்டுவந்தது திமுகதான்.
கல்விக்கான நிதியைக் குறைத்துள்ளது. ரூ.48,500 கோடியிலிருந்து ரூ.45,000 கோடியாக குறைத்துள்ளது தவெக அரசு. காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவை கண்டிக்க வக்கில்லை. குற்றம்செய்ய லைசென்ஸ் வாங்கியதுபோல் செயல்படுகிறது தவெக அரசு”.