செய்தியாளர் சந்தான குமார்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழக பொது செயலாளர் ஆனந்த் தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடி வரும் வருகின்றனர். இந்நிலையில் குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் செல்போனில் அழைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பேசியுள்ளார்.
அதாவது, “உங்களுடன் இருப்பவர்களிடம் நம்பிக்கையாக இருக்குமாறு தெரிவியுங்கள். இதுபோன்ற ஒரு சூழலை நாம் சந்திப்போம் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. இதிலிருந்து வெளிவர வேண்டிய முயற்சிகளை செய்யுங்கள். அனைவரும் நம்பிக்கையுடன், புதிய வேகத்துடன் செயல்படுங்கள்” என கூறியுள்ளார்.
மேலும் கரூரில் உயிரிழந்த மற்றும் பாதிக்கபட்ட மக்களை நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்தவுடன் வந்து சந்திப்பேன் என்றும் அவர்களுக்கு உறுதுணையாக நிச்சயம் கட்சி இருக்கும் என கூறியுள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக பதிவு போடுபவர்கள் மீது வழக்கு பதியப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
வழக்கமாக மாவட்ட செயலாளர்களிடம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பொதுச் செயலாளர் ஆனந்த்தான் பேசுவார். ஆனால் தற்போது விஜய் தனியாக மாவட்ட செயலாளர்களை முதல் முறையாக அழைத்து பேசியுள்ளார்.