வும்அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணையப்போகிறார் என கடந்த இரண்டு நாட்களாக தகவல் வெளியாகிவந்த நிலையில், நேற்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து, இன்று காலை 10 மணியளவில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்த செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் சிலரும் தவெகவில் இணைந்தனர். ”அண்ணன் செங்கோட்டையனின் வருகை தவெகவிற்கு உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்து விஜய் பேசிய வீடியோவும் தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.
தொடர்ந்து, செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தவெக மாநில நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். அப்போது பேசிய செங்கோட்டையன் “மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; 2026 -ல் தவெக தலைவர் விஜயை மக்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, என்னப் பதவியில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் பயணிப்பார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இன்று மாலை தவெக தலைவர் விஜய் செங்கோட்டையன் அவர்களுக்கு பதவியை அறிவிப்பார் எனத் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு 'தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்' என்ற பதவியை அறிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்; தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்: அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர்; மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார். மேலும் கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும் கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களோடும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார்.
மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி சத்தியபாமா. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் திரு. வெங்கடாசலம், திரு. முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” தெரிவிக்கப்பட்டுள்ளது.