எம்.ஜி.ஆர். முதல் பழனிசாமி வரை.. செங்கோட்டையனின் அரசியல் பயணம் - ஓர் பார்வை!
50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் பணியாற்றிய செங்கோட்டையன், இன்று தவெகவில் இணைந்திருக்கிறார். இந்நிலையில், செங்கோட்டையன் கடந்து வந்த அரசியல் பயணத்தை குறித்துப் பார்க்கலாம்.
1972இல் எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது, அதிமுகவில் இணைந்தார் செங்கோட்டையன். குள்ளம்பாளையம் ஊராட்சி தலைவராக பதவி வகித்த செங்கோட்டையன், எம்.ஜி. ஆர் மன்ற மாவட்டச் செயலராக கட்சிப் பணியாற்றத் தொடங்கி, பின்னாளில் அமைச்சர் ஆகும் அளவுக்கு செல்வாக்கு பெற்றார். கோவையில், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம், திருப்பூர் மணிமாறனோடு இணைந்து நடத்தி, எம்.ஜி.ஆரின் விருப்பப் பட்டியலில் இணைந்தார். எம்.ஜி.ஆர் உருவத்தை பச்சை குத்திக்கொண்ட பழம்பெரும் தொண்டர்களில் செங்கோட்டையனும் ஒருவர்.
1977ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு முத்தான வெற்றியை பெற்றவர், அந்த காலகட்டத்தில் காங்கிரஸின் கோட்டையாக கருதப்பட்ட சத்தியமங்கலத்தை கைப்பற்றி கவனம் ஈர்த்தார். 1980ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இன்று வரை அந்தத் தொகுதியே அவரது சொந்தத் தொகுதியாக இருக்கிறது. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே ஒரே தொகுதியில் 8 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் செங்கோட்டையன்.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது, ஜெயலலிதா பக்கம் நின்றவர். ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரைகளுக்கு திட்டம் வகுத்து கொடுத்து பாராட்டைப் பெற்றவர். ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் கட்சியில் அவருடைய செல்வாக்கு மங்காமல் இருந்தது.
தலைமை நிலையச் செயலர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்திருக்கிறார். அதிமுக மாநாடுகளை வெற்றிகரமாக நடத்திய வரலாறும் செங்கோட்டையன் வசம் உள்ளது. ஜெயலலிதா அமைச்சரவையில் 1991இல் போக்குவரத்து துறை, 2011இல் வேளாண் துறைகளைக் கையாண்டவர் செங்கோட்டையன். 2001இல் செங்கோட்டையனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்த ஜெயலலிதா, 2011ஆம் ஆண்டு தனிப்பட்ட காரணங்களால் செங்கோட்டையனிடம் இருந்த அமைச்சர் பதவியை பறித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குபின், எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2017இல் அமைந்த தமிழக அமைச்சரவையில் செங்கோட்டையன் இடம்பெற்றிருந்தார். தொடர்ந்து, கட்சியின் அனைத்து செயல்பாடுகளிலும் சுமுகமான முகத்தையே காட்டிவந்த செங்கோட்டையன், அண்மையில் ஒன்றுபட்ட அதிமுக வேண்டுமென போர்க்கொடி உயர்த்தினார். அதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது ஐம்பதாண்டு கால அரசியல் வாழ்வில் புதிய திசையை நோக்கி பயணிக்க இருக்கிறார் கே.ஏ.செங்கோட்டையன். தவெகவில் இணைந்துள்ள அவரது பயணம் எப்படி அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

