விஜய் - சங்கீதா  web
தமிழ்நாடு

விஜய்-சங்கீதா வழக்கு ஒத்திவைப்பு.. வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி!

த.வெ.க தலைவர் விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் அடுத்த மாதத்துக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

PT WEB

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெறும் நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கில், இரு தரப்பும் அடுத்த கட்ட விசாரணைகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகலாம் என நீதிபதி சசிகலா அனுமதி அளித்துள்ளார். ஊடகங்களில் குடும்ப பிரச்சினை விவாதிக்க தடை கோரி இரு தரப்பும் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு அன்றைய தினம் இருவரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் - சங்கீதா ஆகியோரின் திருமணம் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

விஜய்

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு ஒன்று தாக்கல் செய்தார். இந்த மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா முன்பு விசாரணைக்கு வந்தது. இன்று முதல் நாள் விசாரணை என்பதால் விஜய் சங்கீதா இருவரும் ஆஜராகுவதற்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகவில்லை. இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜரானார்கள்.

அப்போது, நடிகர் விஜய் தரப்பில், தாங்கள் ஆஜராகுவதாக வழக்கறிஞர்கள் குமரேசன், ஜெயராமன் ஆகியோர் வக்காலத்து மனு தாக்கல் செய்தனர். அப்போது மேலும் சில மனுக்களையும் அவர்கள் தாக்கல் செய்தார்கள். அதில், அடுத்த வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜராவதற்கு பதிலாக வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு சங்கீதா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை என்பதால், இரு தரப்பும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராகுவதற்கு நீதிபதி சசிகலா அனுமதி வழங்கினார்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

இதேபோல், விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவில் தங்களது குடும்ப பிரச்சினை தொடர்பாக ஊடகங்களில் விவாதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, கடந்த முறை விசாரணையின் போது சங்கீதாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரு தரப்பும் ஆஜர் ஆகுவதற்கு ஏதுவாக ஜூன் 15ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாகவும் அன்றைய தினம் இரு தரப்பும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.