தூங்காநகரமான மதுரை | 10 தொகுதிகளிலும் கடும் போட்டி.. கள நிலவரம் எப்படி?
தமிழக அரசியலின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் மதுரை மாவட்டம், 10 சட்டமன்றத் தொகுதிகளுடன் மீண்டும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலைச் சந்திக்கிறது.
மீனாட்சி அம்மன் கோயிலும், ஜல்லிக்கட்டுப் பண்பாடும் தவழும் மதுரை மண், இம்முறை நான்கு முனைப் போட்டியால் அதகளப்படுகிறது. முந்தைய தேர்தலில் திமுக கூட்டணி 5 இடங்களையும், அதிமுக 5 இடங்களையும் கைப்பற்றின.
மதுரை மத்திய தொகுதி: அனைத்துச் சமூகத்தினரும் சரிசமமாக உள்ள மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இயக்குநர் சுந்தர் சி மற்றும் தவெக, நாம் தமிழர் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
மதுரை மேற்குத் தொகுதி : அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மதுரை மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது 4-ஆவது வெற்றியை எதிர்நோக்கிப் போட்டியிடுகிறார். இவரை வீழ்த்த திமுகவின் ஆர்.பாலாஜியும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
மதுரை கிழக்குத் தொகுதி: மதுரை கிழக்கில் திமுகவின் அமைச்சர் பி.மூர்த்தி தனது தனிப்பட்ட செல்வாக்குடன் மீண்டும் களம் காண்கிறார். யாதவர் மற்றும் முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் கொண்ட இத்தொகுதியில் அதிமுகவின் மகேந்திரன் பலத்த போட்டி அளிக்கிறார்.
மதுரை வடக்குத் தொகுதி: மதுரை வடக்குத் தொகுதியில் அகமுடையார், இஸ்லாமியர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளனர். தற்போதைய எம்.எல்.ஏ கோ.தளபதி மற்றும் அதிமுகவின் பி.சரவணன் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
மதுரை தெற்குத் தொகுதி: நெசவாளர்கள் மற்றும் ஜவுளி வியாபாரிகள் அதிகம் உள்ள மதுரை தெற்குத் தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுகவின் பூமிநாதன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாஜகவின் ராம சீனிவாசன் களம் இறங்குவதால் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி: முக்குலத்தோர் சமூக வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ராஜன் செல்லப்பா மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுகவின் கிருத்திகா தங்கபாண்டி கடும் சவாலை உருவாக்குகிறார்.
திருமங்கலம் தொகுதி : தமிழகமே உற்றுநோக்கும் திருமங்கலம் தொகுதியில் அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார் தனது பிடியைத் தக்கவைக்கப் போராடுகிறார். திமுகவின் எம்.மணிமாறன் இம்முறை மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்.
மேலூர் தொகுதி : கடந்த பல தேர்தல்களாக அதிமுகவின் கோட்டையாக விளங்கும் மேலூரில் பெரியபுள்ளான் மீண்டும் களம் காண்கிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் போட்டியிடுகிறார்.
சோழவந்தான் தொகுதி; விவசாயம் சார்ந்த சோழவந்தான் தனித் தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. திமுகவின் ஏ.வெங்கடேசன் மற்றும் அதிமுகவின் கே.மாணிக்கம் இடையே இங்கு கடும் போட்டி நிலவுகிறது.
உசிலம்பட்டி தொகுதி: உசிலம்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு தொகுதியின் முடிவுகளைத் தீர்மானிக்க வாய்ப்புள்ளது. அதிமுகவின் ஐ.மகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் சரவணகுமார் என இங்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது

