செழியன் Pt web
தமிழ்நாடு

கல்லூரி முதல் ஜோக்கர் வரை.. பன்முக ஆளுமை செழியனின் சாதனைப் பயணம்!!

திரையுலகின் பன்முகப் பெருங்கலைஞர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளர் இரா.செழியன் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். எழுத்து, ஒளிப்பதிவு, காட்சி என இளம் படைப்பாளர்களுக்கு அவர் கடத்திச் சென்ற பாடங்கள் அதிகம்.

PT WEB

சிவகங்கையில் பிறந்து, கட்டடப் பொறியியல் படித்தார் செழியன். ஆனால், சின்ன வயதில் சினிமா மீதான காதலால் பின்னாளில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகத் தன் பயணத்தைத் தொடங்கியவர் இரா.செழியன். பாலாஜி சக்திவேலின் கல்லூரி திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இவர், தொடர்ந்து தென்மேற்குப் பருவக்காற்று , பரதேசி , தாரை தப்பட்டை, ஜோக்கர், எனத் தமிழின் எதார்த்தப் படங்களுக்குத் தன் கேமரா மூலம் உயிர் கொடுத்தார் அவர்.

செழியன்

ஒளிப்பதிவோடு நிறுத்தாமல், இவர் இயக்கிய 'டூலெட்' திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளைக் குவித்து, 65 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அத்துடன், மிலன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் தட்டிச்சென்றது. அப்துல் கலாம், எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரின் ஆவணப்படங்கள் தயாரிப்பில் பணியாற்றிய பெருமைக்குரியவர். ஆனந்த விகடனில் இவர் எழுதிய உலக சினிமா' தொடர், சினிமா ரசிகர்களின் வேத புத்தகமாக வடிவம் பெற்றது.

'ஹார்மோனியம்' சிறுகதைக்காக 'கதா' விருதும் வென்றுள்ளார். மேற்கத்திய இசையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையிலான புத்தகத்தையும் தந்தவர் செழியன். 'தி ஃபிலிம் ஸ்கூல்' என்ற திரைப்படப் பயிற்சிப் பள்ளி மூலம், ஒரே நேரத்தில் 34 மாணவர்கள் 34 சுயாதீனப் படங்களை இயக்கும் பிரம்மாண்டப் புரட்சிகர முயற்சியையும் இவர் சமீபத்தில் தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கால காலத்திற்கும் பேசும் படைப்புகள் இருக்கையில் அதனை படைத்த கலைஞர்களுக்கு மறைவேது...