வேலு நாச்சியார் pt web
தமிழ்நாடு

தமிழ்ப் பெண்களுக்கு உத்வேகம் தரும் வேலு நாச்சியாரின் வாழ்க்கை பயணம்!

தமிழ்நாட்டு பெண் ஆட்சியாளர்களில், ஓர் அரிய ஆளுமை வேலு நாச்சியார். அவருடைய 66 ஆண்டு வாழ்க்கைப் பயணம் இன்றைய தமிழ்ப் பெண்களுக்கும் உத்வேகம் தரும் ஒரு பயணம் ஆகும்.

Angeshwar G

இந்திய துணைக் கண்ட வரலாற்றில் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண் ஆளுமை வேலு நாச்சியார்! ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியின் ஒரே மகளாகப் பிறந்தவர் வேலு நாச்சி. அடுத்து ஆட்சிக்கு வரவிருக்கும் ஓர் ஆண் வாரிசுக்கு, போர்த் திறன் உள்பட எப்படி சகலகலைகளையும் கற்பித்து மன்னர்கள் வளர்ப்பார்களோ அப்படித்தான் வேலுநாச்சி வளர்க்கப்பட்டார்.

தற்காப்புக் கலைகள் கற்றார்; ஆயுதப் பயிற்சி பெற்றார்; வளரி, மரு, சிலம்பம், குதிரையேற்றத்தில் சிறந்து விளங்கினார். தாய்மொழியாம் தமிழோடு ஆங்கிலம், பிரெஞ்சு, உருது, கன்னடம் என்று பல மொழிகளையும் முறையாகக் கற்றார் வேலு நாச்சி. தன்னுடைய 16 வயதில் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதருக்கு மனைவியானார். ஆட்சி நிர்வாகத்தில் இணைந்து பணியாற்றினார். வருவாய் மூலாதாரங்களை சீரமைத்தார். சட்டதிட்டங்களை  இலகுவாக்கினார்.

1772இல் பிரிட்டிஷாருடனான போரில், தன்னுடைய 42ஆவது வயதில் கணவரையும் நாட்டையும் இழந்த வேலுநாச்சியார், அதோடு ஒதுங்கிவிடவில்லை. விருப்பாச்சி உள்ளிட்ட வனங்களில் தலைமறைவாக வாழ்ந்து, படை திரட்டி, மைசூர் பிராந்தியத்தை அன்று ஆண்டுவந்த ஹைதர் அலியின் உதவி பெற்று, மருது சகோதர்களை முன்னிறுத்தி, வலுவான படையை முன்செலுத்தி பிரிட்டிஷாருடன் போரிட்டார். 1780இல் தன்னுடைய 50ஆவது வயதில் சிவகங்கையை பிரிட்டிஷாரிடமிருந்து மீட்டு, சிவகங்கை ஆட்சியாளராக மீண்டும் பதவியேற்ற வரலாற்றைக் கொண்டவர் வேலு நாச்சியார்.

சங்க காலம் தொட்டே ஆட்சியிலும், போர்த் திறன்களிலும் பங்கெடுத்த பல ஆளுமைகள் தமிழர் வரலாற்றில் உண்டு என்றாலும், சோழர் காலத்தில் பேரரசர் ராஜராஜனுக்கு ஆட்சியில் ஆலோசனை வழங்கும் நிலையிலும்,  கடற்படையிலேயே தளபதிகளாகப் பணியாற்றும் நிலையிலும் பெண் ஆளுமைகள் இருந்திருக்கின்றனர் என்ற போதிலும், தமிழர் வரலாற்றில் விரிவான வரலாற்று சான்றுகளுடன் நமக்கு கிடைக்கும் சிறப்புக்குரிய பெண் ஆட்சியாளர், பன்மொழி அறிவும் நிர்வாக ஆற்றலும் படைத்த பெண் ஆளுமை வேலு நாச்சியார்!