பாலியல் சைக்கோவிடம் சிக்கிய கர்ப்பிணி முகநூல்
தமிழ்நாடு

பாலியல் சைக்கோவிடம் சிக்கிய கர்ப்பிணி; என்ன நடந்தது? எப்படி மீட்கப்பட்டார்..?

சைக்கோவால், ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட அந்த பெண், உயிர்தப்பிப்பிழைத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

PT WEB

வயிற்றில் வளரும் குழந்தையையும், தன்னையும் காப்பாற்றிக்கொள்ள தனி ஒரு பெண்ணாக, ஓடும் ரயிலில், பாலியல் சைக்கோவிடம் போராடியிருக்கிறார் கர்ப்பிணி ஒருவர்.

சைக்கோவால், ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட அந்த பெண், உயிர்தப்பிப்பிழைத்து வாக்குமூலம் அளித்துள்ளார். திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் நான்குமாத கர்ப்பிணியான இந்த பெண், அங்கிருந்து திருப்பதிக்கு இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்தார்.

அந்த பெட்டியில் பயணித்த பெண்கள், ஜோலார்பேட்டை வந்தபோது இறங்கிவிட்டனர். இந்த பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். ரயில் புறப்படும் நேரத்தில் பெண்கள் பெட்டியில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். இது பெண்கள் பெட்டி என்பதால் இறங்குமாறு பெண் கூறிய நிலையில், அடுத்த நிறுத்தமான காட்பாடியில் இறங்கிவிடுவதாக கூறியுள்ளார் அந்த நபர்.

அதற்கடுத்து அந்த நபரின் செயல்கள் விநோதமானதாக இருக்கவே, அந்த பெண் பயந்தபடி இருந்துள்ளார். அப்போதுதான் அந்த நபர் தனது வேலையை காட்டத் தொடங்கினார். அடுத்த அரைமணிநேரத்தில் அந்த நபர் செய்த கொடூரங்களை அந்த பெண்ணே புதிய தலைமுறைக்கு அச்சத்துடன் விவரித்துள்ளார்.

கே வி குப்பம் அருகே காவனூர் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜோலார்பேட்டை காட்பாடி தடத்தில் தண்டவாள பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது இதன் காரணமாக இப்பகுதியை ரயில் கடக்கும்போது வழக்கத்திற்கு மாறாக குறைவான வேகத்தில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாகவே ரயிலின் வலது புறத்திலிருந்து வெளியே தள்ளப்பட்ட கர்ப்பிணி , மண் மற்றும் புல் தரையில் விழுந்து காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார்

தனக்கு நேரிட்டது போல இன்னொரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது என்று கூறும், இந்த பெண், அந்த நபருக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் என்றும் கூறுகிறார்.

கர்ப்பிணியை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, கையை உடைத்து துன்புறுத்திய அந்த சைக்கோ ஹேம்ராஜ் என்பது தெரியவந்தது. கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை தந்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வழக்கில் ஜோலார்பேட்டை காவல்துறையால் ஹேம்ராஜ் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவரான ஹேம்ராஜ், மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்ய துணிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியிலும் பாதுகாப்பில்லை. ஆட்டோவிலும் பாதுகாப்பில்லை, ரயிலிலும் பாதுகாப்பில்லை எனில் பெண்களை மீண்டும் வீடுகளுக்குள்ளேயே சிறை வைக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்குகிறதா இந்த மோசமான சூழல்..?

பொதுசமூகத்தில் சுதந்திரமாக இருக்கமுடியாத நிலைக்கு பெண்களை தள்ளும் இத்தகைய சம்பவங்களில் இருந்து எப்போது பெண்களுக்கு விடுதலை கிடைக்கும்.. ?