வீரப்பன் மகளான வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரப்பன் மகள் வித்யா ராணி, முதலில் பாமகவில் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர், 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநில ஒபிசி துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் வித்யா ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், "வீரப்பன் காட்டை ஆண்டார், அவரது மகள் வித்யா நாட்டை ஆளப்போகிறார்" என்று பேசினார்.
அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த வித்யா ராணி, தொகுதியில் நான்காம் இடம் பிடித்தார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக இயங்கி வருகிறார் வித்யா ராணி.
மேலும், நாம் தமிழர் கட்சியிலிருந்து பல மாநில நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி உள்ள நிலையில் புதிய மாநில பொறுப்பாளர்களை நாம் தமிழர் கட்சி நியமித்து வருகிறது. இந்நிலையில் வீரப்பன் மகள் வித்தியா ராணி நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்ற ஆண்டு கட்சியில் சேர்ந்தவருக்கு மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், " சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, 207ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வித்யா வீரப்பன் (18574358150) அவர்கள், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு! “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூடுதல் தகவலுக்கு இந்த காணொளியை காணவும்..