ராமதாஸ், திருமாவளவன் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் ராமதாஸ் அணி? எதிர்க்கும் விசிக.. அடுத்த நடவடிக்கை என்ன?

திமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவின் ராமதாஸ் அணி இணைவதற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Prakash J

திமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவின் ராமதாஸ் அணி இணைவதற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி தரப்பு என பாட்டாளி மக்கள் கட்சி 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. மேலும், பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக பாமக தலைவர் அன்புமணி - நிறுவனர் ராமதாஸ் இடையேயான முரண்பாடு, தேர்தலுக்குள் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. இருதரப்புமே தேர்தல் முடிவை நான்தான் எடுப்பேன் என உறுதியாக இருப்பதே மோதல் நீடிப்பதற்கு காரணம். இந்தச் சூழலில் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அந்த வகையில், அன்புமணியை பாஜக- அதிமுக கூட்டணி தேர்வு செய்துள்ளது. இதனால், கொதிப்படைந்து போய் உள்ளார் ராமதாஸ். தேர்தலில் தன்னுடைய பலத்தை காட்ட முழு சக்தியைச் செலவிட வேண்டும் என்று ஆதரவாளர் மத்தியில் ராமதாஸ் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், திமுக கூட்டணியில் பாமக ராமதாஸ் அணி இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருமாவளவனின் கருத்தை அறிய திமுகவின் சார்பில் முற்பட்டபோது அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாமக அல்லது பாஜக இடம்பெறும் எந்தவொரு கூட்டணியிலும் விசிக அங்கம் வகிக்காது என்று திருமாவளவன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மருத்துவர் ராமதாஸ்

பாமகவைப் பொறுத்தவரை இந்த தேர்தல் களம், இரு தரப்புக்குமே, கட்சி யார் கையில் உள்ளது என்பதை தெளிவுபடுத்துவது தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது. ராமதாஸிடம் திமுக இணக்கமாகவே இருந்து வருகிறது. அதேசமயம், விசிக உள்ளே இருப்பதால் திமுக கூட்டணிக்குள் வரக்கூடிய வாய்ப்பு இருக்குமா என ஏற்கெனவே அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். எனினும், தவெக தரப்பிலிருந்தும் பாமகவுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.