2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்றும் ஆட்சியமைக்க முடியாமல் தவெக சிக்கலில் சிக்கிய நிலையில், திமுக-அதிமுக கூட்டணி ஆட்சிச் சாத்தியம் குறித்து பரபரப்பு நிலவுகிறது. இந்த சூழலில் விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன், எந்திர மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மக்கள் நலனுக்காக அனுபவமிக்க திருமாவை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்றுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூப்பித்து ஆட்சியமைக்க முடியாமல் இழுபறியில் இருந்துவருகிறது. இந்தசூழலில் திமுக-அதிமுக இணைந்து ஆட்சியமைக்க போகிறது என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் திருமாவை முதல்வராக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர்,”நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வியத்தகு அதிர்வுகளை உருவாக்கி உள்ளன்.
திராவிடகட்சிகளுக்கு எதிரான மக்களின் கோபம் இது என்கிறார்கள் சிலர்.
விஜய் மீதுள்ள ரசிக மனோபாவத்தில் எழுந்த ஒரு ஜென்சி அலை இது. அர்த்தமுள்ள அரசியல் பிரளயம் அல்ல. பொங்கி வழிந்து உடனே வடிந்து நீர்த்துவிடும் மாய சுனாமி இது என்கிறார்கள் சிலர்.
இது மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே நடந்த தேர்தல் அல்ல. மனிதனுக்கும் வாக்குச்சாவடி எந்திரத்திற்கும் இடையே நடந்த யுத்தம் இது. நேர்மையான தேர்தலை நடத்தவா ஞானேஷ்குமாரை பாஜக குறுக்கு வழியில் சட்டங்களை வளைத்து தலைமைத்தேர்தல் அதிகாரியாக கொண்டு வந்தது? பாஜகவுக்கு எதிரான மாநிலங்களில் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய்கருத்தை பொதுக்கருத்தாக திணித்து அதற்கேற்ப வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் அரங்கேற்றப்படும் நுட்பமான மோசடி இது என உறுதிபட சொல்பவர்களின் கருத்தும் புறக்கணிக்க முடியாததுதான். குளத்தூரில் அண்ணன் ஸ்டாலினின் தோல்வி எந்திர மோசடியே தவிர அது வாக்காளர்களின் உணர்வு அல்ல என்பதை அண்மை நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.
இத்தகு சூழலில்தான் குடித்து விட்டு தெருவில் ஆடும் சில தவெக எம் எல் ஏக்களின் ஆட்டம் , திரு. விஜயின் உடனிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களின் பின்னணி இவற்றை கண்டு அதிர்ந்து போன பலரும் அதிமுகவை குறைந்தபட்ச செயல் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திமுக ஆதரிக்க முன்வரவேண்டுமென பேசுவதையும் காண முடிகிறது.
என்னிடமும் சமூக அக்கறையுள்ள நண்பர்கள் இது குறித்து பேசினார்கள்.
ரசிக மனோநிலை உருவாக்கிய ஆபத்திலிருந்து நாட்டை காக்க இப்படி நடந்தால் என்ன என கேள்வி எழுப்பினார்கள்.
இந்த சூழலில் தலைவர் திருமாவை முதல்வராக முன்மொழிந்து அதை நோக்கி நகர்த்துவதுதான் திராவிட கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய சரியான நிலைப்பாடாக இருக்குமென தோன்றுகிறது.
மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் உண்மையிலேயே விரும்பியிருந்தால் தன் வாழ்வை மக்களுக்காக அர்பணித்துள்ள அப்பழுக்கற்ற அனுபவம் வாய்ந்த தலைவர் திருமாவை முதல்வர் ஆக்குவதுதான் சரியாக இருக்கும்.
சமூக நீதி மண் இது என்று மார்தட்டிக்கொள்பவர்கள் தமிழ்நாட்டை காப்பாற்ற இப்படி ஒரு முடிவெடுப்பது காலத்தின் கட்டாயம்.
இது தமிழகத்தின் மீது படிந்துள்ள அனைத்து கறைகளையும் துடைத்தெரிந்து விடும். இருபெரும் எதிர் துருவ திராவிடக்கட்சிகளின் இடையே இது மட்டும்தான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் குறைந்தபட்ச செயல்திட்ட ஒப்பந்தமாக இருக்கும்.
பின்குறிப்பு: சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் அன்பர்கள் கவனத்திற்கு. இது என் தனிப்பட்ட கருத்தல்ல. கோடிக்கணக்கான மக்களை நம்பிக்கையூட்டும் கருத்து.
ஆனால் சத்தியமாக எழுச்சித்தமிழருடன் இது குறித்து நான் கலந்து பேசவில்லை. முதல் முறையாக கட்சித்தோழர்கள் யாருடனும் கலந்து பேசாமல் மக்களின் தாகத்தை நான் பதிவுசெய்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.