தமிழகத்தில் தவெக அரசு பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. முதலில் 9 அமைச்சர்களுடன் தொடங்கிய அமைச்சரவை, மே 21 அன்று கூடுதல் 23 பேருடன் விரிவடைந்தது. காங்கிரஸுக்கு 2 அமைச்சர்பதவி கிடைத்த நிலையில், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளும் முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.
தமிழக சட்டபேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும் ஆட்சிமையக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றபோது அவருடன் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர்.
இந்நிலையில் மேற்கொண்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமலேயே இருந்துவந்த நிலையில், 21ஆம் தேதியான இன்று தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்தசூழலில் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என 2 இலாகாக்களுக்கு அமைச்சர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இடம்பெறும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் தான் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான ஒப்புதல் கடிதத்தை முஸ்லிம் லீக் கட்சி முதல்வர் விஜயை நேரில் சந்தித்து ஒப்படைத்தது. விசிக மட்டும் தாமதப்படுத்திவந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுகிறது. எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராகிறார். எங்களுடைய உயரநிலைக்குழு கூட்டத்தில் பெரும்பாலனவர்கள் அமைச்சரவையில் இடம்பெறவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். இப்போதைக்கு அமைச்சரவையில் இடம்பெறுகிறோம் என்ற அறிவிப்பை மட்டும் வெளியிடுகிறோம். திமுக கூட்டணியில் இடம்பெறுகிறோமா இல்லையா என்பதை பின்னர் அறிவிக்கிறோம்” என்று பேசியுள்ளார்.
அமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் வன்னி அரசு பேசுகையில், “அம்பேத்கருடைய கனவு.. என்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ள விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி. விசிகவிற்கு மட்டுமல்ல அதிகாரப் பகிர்வை விரும்புகின்ற அத்தனை பேருக்கும் இது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். அதிகாரப் பகிர்வு என்பது அம்பேத்கருடைய கனவு. அந்தக் கனவை நோக்கி நாங்கள் நகர்கிறோம். தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள்தான் மய்யம் என்பதை மீண்டும் எங்கள் தலைவர் நிரூபித்துள்ளார்” என பேசினார்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக விசிக அமைச்சரவையில் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.