ஆ. ராசா Pt web
தமிழ்நாடு

திருமா மீது ஆ.ராசா வைத்த குற்றச்சாட்டு., கொதித்தெழுந்த விசிக!

ஆர்.எஸ்.எஸ் - ன் கைக்கூலி ஆ.ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

PT WEB

திமுக துணைப்பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, சமீபத்தில் தனியார் யூ டியூப் சேனல் நடத்திய ”தலைவர்களுடன் மாணவர்கள்” என்ற நிகழ்ச்சி ஒன்றின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சாதிக் கட்சித் தலைவர் எனப் பேசியிருந்தார். முன்னதாக, ’விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஒரு சாதிக்கான கட்சியல்ல, அனைத்து மக்களுக்கான கட்சி’ என விசிகவினர் தொடர்ந்து கூறிவரும் வேளையில், திருமாவளவனை சாதிக்கட்சித் தலைவர் என ஆ.ராசா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆ.ராசாவிற்கு எதிரான விசிக போராட்டம்

இதையடுத்து, திமுக எம்.பி ஆ.ராசாவின் மீது விசிகவினர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து, கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான், விசிக தலைவர் திருமாவளவனை சாதிக் கட்சித் தலைவர் எனக் கூறிய எம்.பி ஆ.ராசாவை எதிர்த்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் அன்பானந்தம் தலைமையில் இன்று மாலை குன்னம் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட விசிக-வினர் கலந்துகொண்டனர்.

ஆர்பாட்டத்தின்போது, ஆர்எஸ்எஸ் கைக்கூலி ஆண்டிமுத்து ராசா மீது திமுக கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 2ஜி ஊழல்வாதி ஆண்டிமுத்து ராசாவே கண்டிக்கிறோம் எனவும் கோஷமிட்டனர்.

இவ்வாறு, விசிக தலைவர் திருமாவளவனை, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா சாதிக் கட்சித் தலைவர் என பேசியிருப்பதும், ஆர்.எஸ்.எஸ் கைகூலி என ஆ. ராசாவை திமுகவினர் விமர்சித்திருப்பதும் திமுக கூட்டணி பிளவுபடுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.