புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வேங்கைவயல் வழக்கில் ஆயுதப்படை காவலர் முரளி ராஜா உள்ளிட்ட 3 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இவர்கள் மூவருக்கும் எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும், முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அரசின் அறிக்கையில், “சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியுள்ளார். அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்” எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், சிபிசிஐடி தாக்கல் செய்த அந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்க கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். “உண்மையான குற்றவாளிகளை காக்கும் நோக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தோன்றுகிறது” எனவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.
சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை.
தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.
உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சி பி சி ஐ டி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக மார்க்சிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும் வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தியிருந்தார்.
இப்படியாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே, திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பது, இன்றைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதேபோல எதிர்க்கட்சியான அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், சிபிஐ விசாரணையை கோரியுள்ளார். அவர் இதுதொடர்பாக, “தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை நம்பும்படியாக இல்லை. எதையோ மூடிமறைக்க அவசரமாக இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருப்பதாக தெரிகிறது. இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். திமுகவின் கூட்டணி கட்சிகளே இதை கேட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை” என்றுள்ளார்.
இதேபோல சமூக செயற்பாட்டாளர் ஹென்றி டிபேன், “வேங்கைவயல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கும்போது எப்படி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “வேங்கைவயல் செயல் தவறான செயல்... அதேநேரம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என சொல்லப்படுபவர்கள், அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களும் பாதிக்கப்பட்ட அதே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களே அவர்களுக்கு இது போன்ற செயலை செய்வார்களா?
யாராவது தங்களுக்கு தானாகவே சூனியம் வைத்துக் கொள்வார்களா? இந்த குற்றப்பத்திரிகை உண்மையை திசை திருப்பும்படி உள்ளது. பழியை யார் மேலாவது போட்டுவிட்டு, குற்றவாளிகளை தப்பிக்க விடுவதே திமுக அரசின் செயலாக உள்ளது. இச்சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடுத்து தண்டனை தர வேண்டும்” என்றுள்ளார்.
அரசியல் கட்சியினரின் இந்த வாதங்கள், வேங்கவயல் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.