“பெரியார், பிரபாகரன் குறித்து சர்ச்சையாக பேசுவதை சீமான் கைவிட வேண்டும்” - திருமாவளவன்
செய்தியாளர்: ராஜ்குமார்
விடுதலை சிறுத்தைகள் கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கிறது. இதையடுத்து விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை ஆர்.ஏ.புரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசிய போது....
“விசிக கட்சி தொடங்கி 10 ஆண்டுகள், பொது பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தோம். பின்னர் 1999 முதல் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் அரசியலில் பயணித்து வருகிறோம். ஆரம்பத்தில் தேர்தல் வன்முறைக்கு ஆளாகினோம் என்பதை நினைவு கூர்ந்து அங்கீகாரம் பெற்றதை சமர்பிக்கிறோம். இந்த நேரத்தில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். அதேபோல் தமிழக மக்களின் நலன்களுக்கு தொடர்ந்து விசிக செயல்படும்.
தமிழ் தேசியத்தை சீமான் கைவிட்டு இருக்கிறார். அவரே முரண்பட்டு பேசி தந்தை பெரியார் குறித்து விமர்சிக்கும் அவதூறு கருத்துக்களை ஏற்க முடியாது. பிரபாகரன், பெரியாருக்கு எதிராக பேசினார் என்ற கருத்து உண்மையில்லை. இது போன்ற பேச்சை சீமான் கைவிட வேண்டும். அதேபோல் அம்பேத்கர் கூட பெரியார் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கிறது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.