மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முடிவுகள் 9-ம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றன. தவெக அரசில் நடைபெறும் முதலாவதாக நடக்கும் இடைத்தேர்தலாக இருப்பதால், வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் விஜய். அதேசமயம், சட்டபேரவைத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியடைந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்தச்சூழலில் தான், இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
கடந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிகள் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால், அந்த கட்சிகள் (இடதுசாரிகள் தவிர) தற்போது தவெக தலைமையிலான ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில்’ இணைதிருக்கின்றன. சிபிஎம் மற்றும் சிபிஐ கூட்டணி வைத்து இடைத்தேர்தலில் களம் காணவிருக்கிறது. இந்நிலையில் தான், இடைத்தேர்தல் நடக்கவுள்ள இரு தொகுதிகளிலும் பரப்புரைகள் தீவிரமடைந்திருக்கின்றன.
அந்தவகையில், இன்று மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பரப்புரை மேற்கொள்ள விருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால், இன்றைய தினம், தேர்தல் ஆணையர் தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் எஸ்.ஐ.ஆர் குளறுபடிகள் தொடர்பாக இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுவதால், திருமாவளவன் அதில் கலந்துகொள்ளவிருக்கிறார். இதனால், இன்று அவர் மதுராந்தகத்தில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மதுராந்தகத்தில் செப் -30 அன்று விசிக சார்பில் தவெக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே நாளில் 'இந்தியா கூட்டணி' யின் கலந்தாய்வுக் கூட்டம் புது தில்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க தில்லிக்குச் செல்ல வேண்டியுள்ளதால் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தைத் திட்டமிட்டவாறு நடத்திட இயலாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே, அக்டோபர்-01 அன்று 'மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'யின் சார்பில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சிறுத்தைகள் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.