திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் pt web
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு... வி.சி. சந்திரகுமார் போட்டி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருப்பத்தின்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்திருந்த நிலையில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Angeshwar G

4 ஆண்டுகளில் 3ஆவது முறை தேர்தலை சந்திக்கிறது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி. 2021 தேர்தலின்போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றிவாகை சூடினார். 2023ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்ததை அடுத்து நடந்த இடைத் தேர்தலில், கங்கிரஸ் மூத்த தலைவரும், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி வெற்றிக்கனியை தட்டிச் சென்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டி

சுமார் இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனும் உடல்நலக்குறைவால் அண்மையில் மறைந்தார். இதனையடுத்து, காலியாக அறிவிக்கப்பட்ட அந்த தொகுதிக்கு பிப்ரவரி ஐந்தாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்கட்சி போட்டியிடாது என்ற அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு தலைவராக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது மேலும், INDIA கூட்டணியின் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம் எனவும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக போட்டியிடுவதில் தங்களுக்கு எந்த வருந்தமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

வி.சி. சந்திரகுமார் திமுக வேட்பாளராக அறிவிப்பு

இந்நிலையில் திமுக சார்பாக விசி சந்திரகுமார் போட்டியிடுவார் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளராக இருக்கும் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.