தமிழக சட்டபேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும் ஆட்சிமையக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றபோது அவருடன் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர்.
இந்நிலையில் மேற்கொண்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமலேயே இருந்துவந்த நிலையில், 21ஆம் தேதியான நேற்று தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்தசூழலில் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என 2 இலாகாக்களுக்கு அமைச்சர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இடம்பெறும் என சொல்லப்பட்டது.
முன்னதாக, தவெகவுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருவதாகவும் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை எனவும் கூறியிருந்த விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள், தவெக விருப்பத்தின் காரணமாக தாங்கள் அமைச்சரவையில் இணைவதாக இருகட்சிகளும் உறுதிபடுத்தியிருந்தன. இந்தசூழலில் தான், இன்று விசிக திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர் வன்னியரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் இன்று ஆளுநர் முன்னிலையில் இன்று காலை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
இந்தசூழலில் தான், வன்னி அரசுக்கு சமூக நீதித் துறை இலாக்காவும், ஷாஜகானுக்கு சிறுபான்மை நலத்துறை இலாக்காவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வன்னி அரசு அமைச்சராக பதவியேற்றிருப்பதன் மூலம், தவெக அமைச்சரவையில் பட்டியலின அமைச்சர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்திருக்கிறது.