வேன் மீது லாரி மோதிய விபத்து pt desk
தமிழ்நாடு

வாணியம்பாடி | வேன் மீது லாரி மோதிய விபத்து – சிறுமி கார் ஓட்டி பழகியபோது தாய் உயிரிழப்பு

வாணியம்பாடியில் 17 வயது சிறுமி பயிற்சி பள்ளி காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதால் பரபரப்பு. காரில் இருந்த தாய் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வேப்பம்பட்டு பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே ஓட்டுநர் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருபவர் லாலா ஏரி பகுதியைச் சேர்ந்த சுகந்தி. இவர், பெண் என்பதால் இவரிடம் ஓட்டுனர் பயிற்சி பெற பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளனர். இந்நிலையில் இவரிடம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியைச் சேர்ந்த நாசிய சபாகத் (35, இவரது மகள் ஷாஃபிய அனம் (17), மற்றும் ஷாயினா அபிபா (16), ரியா(17), நஃபியா சித்திகா (16) உள்ளிட்டோர் ஒரே மாருதி ஆம்னி வேனில் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை கிரிசமுத்திரம் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ஆம்னி வேனை ஷாஃபிய அனம் (17), இயக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் திடீரென திருப்பப்பட்டதால் பின்னால் வந்த லாரி வேனின் பக்கவாட்டில் பலமாக மோதியுள்ளது. இதில், இருந்த 5 பேரும் படுகாயமடைந்த நிலையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாபியா சபாகத் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சுகந்தி உட்பட இருவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.