செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிகிக்சை அளித்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் பெண்கள் வார்டு மிகவும் மோசமான நிலையில் பழுந்தடைந்து உள்ளது. நோயாளிகள் தங்கும் அறையில் அதிக அளவு எலிகள் சுற்றித் திரிகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எலிகளின் கூடாரமாகவே பெண்கள் வார்டு இருப்பதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவசுப்பிரமணியை தொடர்பு கொண்டு கேட்டபோது, தகவல் ஏதும் வரவில்லை உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்