செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாசம். இவர், கடந்த 17 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வரும் நிலையில், இன்று தொழிற்சாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கிரிசமுத்திரம் பகுதியில் விட்டு விட்டு மீண்டும், தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, கிரிசமுத்திரம் பகுதியில் சாலையோரம் விழுந்து கிடந்த பையை மீட்டு அதை சோதனை செய்த போது, அதில், ஏ.டி.எம். கார்டுகள், 19,000 ரூபாய் பணம் இருப்பது தெரியவந்துள்ளது,
இதையடுத்து உடனடியாக அந்த பணத்தை பிரகாசம், வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய ஆய்வாளர் பேபியிடம் ஒப்படைத்தார், அதனை தொடர்ந்து பிரகாசம் ஒப்படைத்த பணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்ட போது, அப்பணம் பாப்பனப்பல்லி பகுதியைச் சேர்ந்த நிரோஷா என்ற பெண்ணுடையது என்பதும், அவர் தனது மகள் சுஷ்மிதாவிற்கு கல்லூரி கட்டணம் செலுத்த தங்கநகையை அடகு வைத்து, 19,000 ரூபாய் பணத்தை பையில் வைத்து இருசக்கர வாகனத்தில் சென்ற போது, தவறவிட்டது தெரியவந்துள்ளது,
இதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர், நிரோஷாவிடம் விசாரணை செய்து தவற விட்ட பணம் அவருடையது தான் என உறுதியானதை தொடர்ந்து பணத்தை காவல் ஆய்வாளர் நிரோஷாவிடம் ஒப்படைத்தார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷை சால்வை அணிவித்து பாராட்டினார்.