செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் ஊராட்சியில் உள்ள சிமுக்கம்பட்டு பகுதியில் மலைக்குன்றின் மீதுள்ள சக்தி மலை முருகன் கோயில் உள்ளது. நேற்று இரவு இந்த கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கோயில் வளாகத்தில் போடப்பட்டிருந்த 5 பூட்டுகளை உடைத்து சாமி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கத்தாலி, மற்றும் பீரோவில் வைத்திருந்த அலங்காரப் பொருட்கள், மற்றும் உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்,
இதையடுத்து இன்று காலை கோயிலை திறப்பதற்காக வந்த கோயில் நிர்வாகி ராஜேந்திரன் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, சாமி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கத்தாலி, மற்றும் அலங்காரப் பொருட்கள், கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது, இதுகுறித்து ராஜேந்திரன் உடனடியாக திம்மாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த பல மாதங்களுக்கு முன் இதே கோயிலில் கோபுர கலசம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக தங்கத்தாலி உண்டியல் பணம் மற்றும் அலங்காரப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.