சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வண்டலூர் அருகே செயல்படக்கூடிய காப்பகம் ஒன்றில் 40 க்கும் மேற்பட்ட சிறுமிகள் வசித்துவரும்நிலையில், அவர்களுக்கு தேவையான கல்வி, உணவு ஆகியவை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் உரிமையாளர் அருள்தாஸ் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான், இதில் உள்ள 18 சிறுமிகளுக்கு , காப்பகத்தின் உரிமையாளர் அருள்தாஸின் ஓட்டுநர் பழனி என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுமிகள் மாவட்ட சிறுமிகள் நல அலுவளரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், மாவட்ட குழந்தை நல அலுவலர் வண்டலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
இந்த புகாரின் அடிப்படையில், அந்த காப்பகத்தின் உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டநிலையில், உரிமையாளர் அருள்தாஸுக்கு உடல்நிலை சரியில்லாத சூழலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதா? , என்ன நடந்து என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கூடுதலாக, 18 குழந்தைகளிடம் குழந்தைகள் நல அலுவலரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
முதற்கட்டவிசாரணையில், காப்பகத்தின் உரிமையாளர் அருள்தாஸிடமும், மகள் பிரியாவிடமும் குழந்தைகள் தொடர்ந்து புகார் அளித்துள்ளனர் . ஆனால், நடவடிக்கை எடுக்காமல் அதை அலட்சியமாக விட்டதாக கூறப்படுகிறது. எனவே, முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது விசாரணைக்கு பிறகு முழு விவரங்கள் தெரியவரும்.