“ஜெயலலிதாவைச் சந்தித்தது மிகப்பெரிய தவறு” - ஆவேசமாகப் பேசிய வைகோ.. எப்போது நடந்த சம்பவம் அது?
“அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நினைத்தவன் அல்ல நான். அன்று திருச்சி திமுக மாநாட்டிற்கு செல்லாமல் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. சென்னை பூந்தமல்லியில் மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் இப்படிப் பேசியிருக்கிறார் வைகோ. அவர் சொல்லும் சம்பவம் எப்போது நடந்தது.. எதனால் அந்த முடிவை எடுத்தார் வைகோ... கொஞ்சம் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவோம்.
திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டபிறகு, 1994-ல் மதிமுகவைத் தொடங்கினார் வைகோ. 1996-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்தான் அந்தக் கட்சிக்கு முதல் பொதுத்தேர்தல். திமுக அதிமுக இருவருக்கும் மாற்று ம.தி.மு.க-தான் என்கிற முழக்கத்தை முன்வைத்து தேர்தலில் களமிறங்கினார் வைகோ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது ம.தி.மு.க.
ம.தி.மு.க கூட்டணியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஜனதா தளமும் தலா ஒரு இடத்தில் வெற்றிபெற 177 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. அந்தக் கட்சிக்கு 5.8 சதவிகித வாக்குகள் கிடைத்தன. 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை தி.மு.க உள்ளிட்ட பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. பா.ஜ.க போட்டியிட்ட 21 தொகுதிகளைத் தவிர்த்து, 211 தொகுதிகளில் போட்டியிட்டது ம.தி.மு.க. ஆனால், ஒரு இடத்தில்கூட அந்தக் கட்சி வெற்றிபெறவில்லை. வாக்குவங்கியும் 4.7 சதவிகிதமாகக் குறைந்தது. தொடர்ந்து 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு நான்கிலும் வெற்றி பெற்றது.
தொடர்ந்து வந்தது 2006 சட்டமன்றத் தேர்தல்.. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை திமுகவுடனே நடத்தி வந்தது மதிமுக. தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது திமுக. அதனால் இழுபறி நீடித்து வந்தது. அதேவேளை திருச்சியில், மார்ச் 3 முதல் ஐந்தாம் தேதி வரை மூன்று நாள்கள் மாநாட்டுக்கு திமுக ஏற்பாடு செய்திருந்தது. அந்த மாநாட்டுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டில்தான் திமுகவின் தேர்தல் அறிக்கையும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடப் போகும் தொகுதிகளின் எண்ணிக்கையையும் வெளியிடப்படவிருந்தது. அழைப்பிதழில் வைகோவுக்கு முக்கியத்துவம் தந்ததோடு மாநாட்டு வளாகத்தில் வைகோவை வரவேற்று மிகப்பெரிய அளவில் கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், யாரும் எதிர்பாராவிதமாக, மாநாட்டின் இரண்டாம் நாளன்று போயஸ் கார்டனுக்குச் சென்றார் வைகோ.
“2004 நாடாளுமன்றத் தேர்தலில் நான் சிறையில் இருக்கும்போது தன்னைக் கட்டாயப்படுத்தி கூட்டணி உடன்பாட்டில் தி.மு.க. இணைத்து விட்டது. பட்டத்து இளவரசருக்கு அதாவது ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டுவதற்காக என் கட்சியை நசுக்கப் பார்க்கிறார்கள்” என்று பரபரப்பாக பேட்டியளித்தார் வைகோ. இந்த விஷயத்தை அறிந்த உடனேயே திமுக தொண்டர்கள் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வைகோவின் கட்-அவுட்டை அடித்து நொறுக்கி, தொண்டர்கள், தீ வைத்தனர். ம.தி.மு.க. கொடிகளையும் கிழித்துத் தீயில் போட்டார்கள்.
மாநாட்டு இறுதியில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, “எப்போதும் கைதூக்கி விட்டவர்களை மறக்கக்கூடாது. யார் கைதூக்கி விட்டார்களோ அவர்களை மறக்கக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என மறைமுகமாக வைகோ விமர்சித்திருந்தார். வைகோ அதிமுகவோடு கூட்டணி வைத்தது அதிகமாக விமர்சிக்கப்படக் காரணம்.., அதற்கு முன்பாகத்தான் ஜெயலலிதா அரசு பொடா வழக்கில் அவரைக் கைது செய்து 19 மாதங்கள் சிறைப்படுத்தியது. அப்போது ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சிருந்தார் வைகோ. அதற்குப் பிறகும் அதிமுகவோடு கூட்டணி வைத்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அந்தத் தேர்தலில், 35 தொகுதியில் போட்டியிட்ட மதிமுக ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. எட்டு சட்டமன்ற உறுப்பினர்களாவது வேண்டும் என்பதால் அப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாக தற்போது விளக்கம் தந்திருக்கிறார் வைகோ. ஆனால், அப்போது, திமுக கூட்டணியிலேயே இருந்திருந்தால், பத்து இடங்களுக்கு மேல் அவர் வெற்றி பெற்றிருக்கலாம் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..