சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார்.
கடந்த இரு தினங்களாகவே மதிமுக - திமுக கூட்டணி இடையே உரசல் இருப்பதாக செய்திகள் வெளியானது. உதாரணத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு தராததால் மதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த மதிமுகவின் 31 ஆவது பொதுக்குழு கூட்டத்திலும், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு போட்டியிட வேண்டுமென்பது உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான துரை வைகோவும் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.. இத்தகைய சூழலில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி பல்லடம் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துரத்தினம் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் ரவி ஆகியோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இப்படி ஏகப்பட்ட விவகாரங்களுக்கு மத்தியில்தான் அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் வைகோ. கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. இணக்கமாகவே இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சந்திப்பில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் இருந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
முதலமைச்சர் உடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். இந்த திமுக அரசுக்கு எதிராக எந்த பிரச்னையிலும் நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை, பேசவும் மாட்டேன். இந்துத்துவ சனாதன சக்திகள், திராவிட கொள்கைகளைத் தகர்க்கலாம் என நினைத்தால், இமயமலையைக் கூட அசைக்கலாம் திராவிட கொள்கைகளை ஒன்றும் செய்ய முடியாது. திராவிட இயக்கங்களின் லட்சியங்களும் கொள்கைகளும்தான் என் நரம்பில் ஓடும் குருதி ஓட்டமாக இருக்கின்றன. வருகிற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையாக வென்று ஆட்சியைப் பிடிக்கும்” எனத் தெரிவித்தார்.
நேற்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுகவை இதுவரை விமர்சித்தது இல்லை. இனிமேல் விமர்சிக்கப்போவதுமில்லை எனத் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “கலைஞரின் இறுதி மூச்சு அடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரிடம் அழைத்துச் சென்றார். கலைஞர் என்னை பார்த்ததும், ‘உங்களுக்கு எப்படி பக்க பலமாக 30 ஆண்டுகள் இருந்தேனோ, அதேபோல தம்பிக்கும் பக்கபலமாக இருப்பேன்’ என்றேன்.
அந்த வகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறோம். இன்று வரை இந்த அரசை எதிர்த்து சிறு ஆர்ப்பாட்டம் கூட நடத்தியதில்லை; ஒரு அறிக்கை கொடுத்ததில்லை. இத்தனை இடங்களில் போட்டியிட்டுத்தான் தீருவோம் என்று சொன்னதில்லை. கருத்துகளை வேண்டுமானால் அறிக்கைகளாகத் தந்திருப்பேனே ஒழிய திமுக அரசை ஒருபோதும் விமர்சித்ததில்லை. இனி விமர்சிக்கப்போவதுமில்லை.
நிர்வாகக்குழுவில் கூட்டணி தொடர்பான இடங்கள் குறித்து ஒரு வார்த்தை நான் பேசவில்லை. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தேர்தலுக்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு நடக்கும்.. அப்போது எங்களது கருத்துகளை நாங்கள் சொல்லுவோம்” எனத் தெரிவித்தார். இந்நிலையில்தான் முதலமைச்சரை சந்தித்துப் பேசியிருக்கிறார் வைகோ..